அமெரிக்காவின் 3000 மேலதிக துருப்புகள் சவூதிக்கு விரைவு | தினகரன்


அமெரிக்காவின் 3000 மேலதிக துருப்புகள் சவூதிக்கு விரைவு

சவூதி அரேபியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புகளை அந்நாட்டுக்கு அனுப்பும் அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ளது.

போர் விமானங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உட்பட மேலதிக படையினர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் சவூதிக்கு பாதுகாப்பாக கூடுதலாக போர்க் கப்பல்கள், ஒரு போர் விமானம் மற்றும் விமானப் படை வீரர்களை அனுப்பி வைக்க உள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது 2 பட்ரியாட் பேட்டரீஸ் மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்பு ஒன்றையும் அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது பிராந்திய அச்சுறுத்தலுக்கு பதில் நடவடிக்கை என்றும் ஈரானிய ஆக்கிரமிப்பில் இருந்து சவூதி அரேபியாவை பாதுகாக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 3000 அமெரிக்க மேலதிக துருப்புகள் சவூதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

கடந்த செப்டெம்பரில் சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்தே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது. கடந்த மே தொடக்கம் பிராந்தியத்தில் அமெரிக்கா 14,000 படைகளை நிறுவி இருப்பதாக சி.என்.என் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மேலதிக உதவிகளை கேட்டதாக எஸ்பர் தெரிவித்துள்ளார்.

சவூதி எண்ணெய் நிலைகள் மீதான தாக்குதல் 5 வீத சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக சவூதி மற்றும் ஈரான் குற்றம்சாட்டுகின்றன.

இதனை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.


Add new comment

Or log in with...