ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலால் 18 பேர் உயிரிழப்பு | தினகரன்


ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலால் 18 பேர் உயிரிழப்பு

ஜப்பானை கடந்த பல தவாப்தங்களில் தாக்கிய சக்தி வாய்ந்த புயலில் 18 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 13 பேர் காணாமல்போயுள்ளனர்.

மணிக்கு 225 கி.மீ வேகத்தில் தாக்கிய ஹகிபிஸ் புயலால் வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நதிகள் குறைந்தது 14 இடங்களில் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளை மூழ்கடித்துள்ளன.

ஹகிபிஸ் என்னும் டைபூன் புயல் உள்ளுர் நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஈஸு தீபகற்பத்தில் கரையைக் கடந்தது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உட்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 இலட்சம் பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

டோக்கியோவில் ஹோட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கையாக ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக்கப்பட்டது.

வடக்கை நோக்கி நகரும் ஹகிபிஸ் புயல் நேற்றுக் மாலை வலுவிழந்து வடக்கு பசிபிக்கை நோக்கி கரையை கடந்தது.

புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளும் மீட்புப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. ஹகிபிஸ் புயல் வலுவிழந்து கடுமையான வெப்ப மண்டலப் புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...