இலங்கை டி20 அணியின் அடுத்த தலைவர் தொடர்பில் தேர்வுக் குழு தலைவர் கருத்து | தினகரன்


இலங்கை டி20 அணியின் அடுத்த தலைவர் தொடர்பில் தேர்வுக் குழு தலைவர் கருத்து

சர்வதேச டி20 அரங்கிலிருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றால் அவருடைய இடத்துக்கு நிரோஷன் திக்வெல்ல அல்லது தசுன் ஷானக்கவை நியமிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்த தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, கடந்த வியாழக்கிழமை மாலை நாடு திரும்பியது.

இந்த நிலையில இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்வுக் குழு தலைவர் அசந்த டி மெல், இலங்கை டி20 அணியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது,

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் தசுன் ஷானக்க தலைவராகச் செயற்பட்டு அணியை சிறந்த முறையில் வழிநடத்தினார். இதனால் அவரை இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணியின் உப தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கூறுவது நியாயமில்லை இல்லை.

அதேபோன்று அணிக்கு தலைவராகவோ அல்லது உப தலைவராகவோ நியமிக்கப்படுகின்ற வீரர் தொடர்ந்து அணியில் விளையாடுகின்ற வீரராக இருக்க வேண்டும். அதுதான் முதல் நியதியாகும்.

எனவே, தசுன் ஷானக்க எதிர்வரும் காலங்களில் 6ஆவது அல்லது 7ஆவது இலக்கத்தில் களமிறங்கி தொடர்ந்து தனது திறமையினை வெளிப்படுத்தினால் அவருக்கு தலைவர் பதவி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

அத்துடன் பாகிஸ்தான் தொடரில் இருந்து நிரோஷன் திக்வெல்ல விலகிக் கொண்ட காரணத்தால் தான் தசுன் ஷானக்கவுக்கு தலைவர் பதவியைக் கொடுத்திருந்தோம். அதை வைத்து நிரோஷன் திக்வெல்லவிடம் இருந்து தசுன் ஷானக்கவுக்கு உப தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கூறுவது நியாயமில்லை.

மறுபுறத்தில் டி20 அணியின் தலைவராக லசித் மாலிங்க எத்தனை வருடங்கள் விளையாடுவார் என கூறமுடியாது. எனவே அவர் ஓய்வு பெற்றால் அப்போது இலங்கை டி20 அணியின் தலைவர் மற்றும் உப தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்க முடியும். ஆகவே நிரோஷன் திக்வெல்லவை உப தலைவர் பதவியில் இருந்து நீக்குவது பொருத்தமில்லை. அவர் அண்மையில் நிறைவுக்கு வந்த நியூசிலாந்து அணியுடனான தொடரில் உப தலைவரக சிறப்பாக செயற்பட்டார். எனவே, அவரிடமும் தலைவருக்கான அனைத்து தகுதியும் உண்டு” என குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...