2 மணி நேரத்திற்குள் மரதன் போட்டியை முடித்த முதல் வீரராக கிப்சோகோ சாதனை | தினகரன்


2 மணி நேரத்திற்குள் மரதன் போட்டியை முடித்த முதல் வீரராக கிப்சோகோ சாதனை

ஆனால் அது சர்வதேச சாதனையாக கொள்ளப்படமாட்டாது

முழு மரதன் தொலைவை 2 மணிநேரத்துக்குள் கடந்த உலகின் முதல் வீரர் எனும் புதிய சாதனையை கென்யாவைச் சேர்ந்த தடகள வீரர் எலுட் கிப்சோகே படைத்துள்ளார்.

முழு மரதன் ஓட்டத்தின் தொலைவு 42.2 கி.மீ. ஆகும். இந்தத் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலுட் கிப்சோகே கடந்துள்ளார். ஆனால், இந்த மரதன் ஓட்டம் அதிகாரபூர்வமானது அல்ல என்பதால், இது சர்வதேச சாதனைப் பட்டியலில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது

கென்ய வீரர் கிப்சோகேவுக்குத் துணையாக 42 வீரர்கள் உடன் காரிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்தார்கள். இதில் 1500 மீற்றர் ஒலிம்பிக் சாம்பியன் மெத்யூ சென்ட்ரோவிட்ஸ், ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மீற்றரில் வெள்ளி வென்றவரான போல் செலிமோ உள்ளிட்ட பலர் துணையாகச் சென்றனர்.

கென்ய வீரர் கிப்சோகே எங்கெல்லாம் சோர்வடைந்தாரோ அங்கு உடனடியாக தண்ணீர், குளுக்கோஸ், சத்துப்பானம், ஆகியவற்றைக் கொடுத்து அவரைச் சோர்வடையவிடாமல் ஓடவைத்தனர். ஆனால், உண்மையான மரதன் போட்டியில் இவ்வாறு செய்தல் கூடாது.

வீதியில் ஓடும்போது பக்கவாட்டில் ஆங்காங்கே மேசையில் குடிநீர் போத்தல்கள், சத்துப்பானங்கள் இருக்கும். அதை வீரர்களே எடுத்துக் குடிக்க வேண்டும் என்பதுதான் முறை.

இந்த மரதன் போட்டியில், ஒரு கிலோ மீற்றர் தொலைவைக் கடக்க கிப்சோகே சராசரியாக 2.50 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 21 கிலோமீற்றர் தொலைவை 59.35 வினாடிகளில் கடந்தார்.

ஆனால் 2 மணிநேரத்துக்குள்ளாக முழு மரதன் தொலைவையும் கடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனாலும், வினாடிகள் அடிப்படையில் 2.48 நொடிகள் முதல் 2.52 நொடிகள் வரை கிப்சோகே 2 மணிநேரத்துக்குள் வருவதில் தாமதம் இருந்தது. ஆனால் 2ஆம் பகுதியில் ஓடும்போது கிப்சோகே ரசிகர்களின் ஆரவாரம், ஆதரவுக் குரல்கள் ஆகியவற்றால் உற்சாகமடைந்தார். இதனால், முழுமையான மரதன் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலுட் கிப்சோகே கடந்தார்.

இந்த மரதன் ஓட்டத்தை இங்கிலாந்தின் இரசாயன நிறுவனமான ஐ.என்.இ.ஓ.எஸ் நடத்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முழு மரதன் தொலைவை 2 மணிநேரத்துக்குள் முடிக்க கப்சோகே முயன்று தோல்வி அடைந்தார். ஆனால், 2ஆவது முயற்சியில் வெற்றி பெற்றார். ஆனால், 2018ஆம் ஆண்டு நடந்த பெர்லின் தடகளப் போட்டியில் கிப்சோகேயின் மரதன் சாதனை ஓட்ட நேரம் என்பது 2 மணிநேரம், ஒரு நிமிடம் 39 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...