நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும் | தினகரன்


நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்

எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவைச் சாரும். அதன் பொருட்டு உரிய குழுவை உருவாக்குவது மிக முக்கியமான காரணியாகுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

அண்மையில் மாத்தறையில் நிகழ்வொன்றில் ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார்.  இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காலிமுகதிடலில் நடைப்பெற்ற கூட்டத்தின் வெற்றிக்கு பிரதான காரணம் கட்சியின் ஒற்றுமையாகும். அமைச்சர் சஜித்பிரேமதாசவை எம்முடைய புதிய ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளோம். பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராவார். சஜித்பிரேமதாசவின் தேர்தல் வெற்றியின் பொருட்டு முழு கட்சியும் இணைந்தே இத்தீர்மானத்தை எடுத்தது என்பது அன்று நன்கு புலப்பட்டது. எம்முடைய நாட்டு வரலாற்றில் என்றும் இல்லாததைப்போன்று பெருந்திரளான மக்கள் கொழும்பில் நடைபெற்ற அரசியல் கூட்டத்திற்கு வருகைதந்தார்கள்.

எதிர்காலத்தில் செயற்படுவதற்கு வேண்டிய குழுவை எம்முடைய தலைவர் நியமிக்க வேண்டும். பிரதம அமைச்சருடன் இணைந்து அவர் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கும் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். எம்முடைய நாடு அபிவிருத்தியடைந்த நாடல்ல. எம் நாட்டு மக்கள் பல இன்னல்களிற்கு மத்தியில் வாழ்கின்றார்கள், இம் மக்களைநல்லதொரு நிலைக்கு கொண்டுவரும் வரையில் அம்மக்களிற்கு தேவையான உதவிகளை நாம் செய்துக்கொடுக்க வேண்டும். இதன் பொருட்டு உரிய குழுவை நியமிக்க வேண்டும். அமைச்சர் சஜித்பிரேமதாசவும், பிரதம மந்திரிரணில் விக்கிரமசிங்கவும் இச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.


Add new comment

Or log in with...