எல்பிட்டிய தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் அல்ல | தினகரன்


எல்பிட்டிய தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் அல்ல

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்த போதிலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார்  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக கூறினார். 

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் அண்மையில் காலமானார்.

மற்றொரு வேட்பாளர் தனிப்பட்ட காரணங்களுக்காக எல்பிட்டியவை விட்டு மேல் மாகாணத்துக்கு ​சென்றார். இந்த கஷ்டங்களுக்கிடையில்தான் நாம் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. கடந்த தேர்தலின் போது கூட நாம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதில்லை. சில தொகுதிகள் குறிப்பிட்டவொரு அரசியல்கட்சிக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

மத்திய கொழும்பை நாம் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டை என்று கூறுவோம். அது போலத்தான் எல்பிடடியவும். எல்பிட்டிய பிரதேச சபையின் வெற்றி ஜனாதிபதி தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று இவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாம் இந்த தொகுதிகளில் தோல்வியடைந்திருந்தோம் என்று அவர் கூறினார். 

ஜனாதிபதித் தேர்தல் பிரதேச சபைத் தேர்தலைப் போன்றதல்ல. கடந்த முறை நாம் காலியில் தோற்றோம். ஆனால் மஹியங்கனை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் மட்டுமன்றி கண்டி, ஹற்றன் ஆகிய இடங்களிலும் வெற்றிபெற்றோம்.

இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் இந்த இடங்களை மட்டுமின்றி மேலும்பல தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்.

எனவே எல்பிட்டிய பிரதேச சபை வெற்றியுடன் ஜனாதிபதி தேர்தலை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல என்று அவர் மேலும் கூறினார்.


Add new comment

Or log in with...