ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.கா. கோட்டாபயவுக்கு ஆதரவு | தினகரன்


ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.கா. கோட்டாபயவுக்கு ஆதரவு

ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் முடிவு

2019 நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று (13) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இதனை அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று (13) காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இதனை அறிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 30 அம்சக் கோரிக்கைகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையிலே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு, இ.தொ.கா தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை கொட்டகலையில் கூடிய இ.தொ.கா. நிர்வாக சபை, தேசிய சபையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. தேசிய சபையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இ.தொ.காவின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடி அறிக்கையைச் சமர்பிக்குமாறு, இ.தொ.காவின் உப தலைவர்களான செந்தில் தொண்டாமன், எம்.ரமேஸ்வரனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, மேற்படி இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை அறிக்கையாக தேசிய சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இவ்விடயங்கள் குறித்து, இன்றைய நிர்வாக சபையிலும் தேசிய சபையிலும் கலந்துரையாடப்பட்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா தலைமையில், ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்று, ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த 30 அம்சக் கோரிக்கைகளையும் ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வெளியிடுவதாக மொட்டுக் கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது என்றும் இதற்கமைவாகவே, தாம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் 30 அம்சக் கோரிக்கைகளையும்  குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றி முடிக்கவுள்ளதாக, மொட்டுக்கட்சி  உறுதிமொழி வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)


Add new comment

Or log in with...