Home » தமிழ் வெறும் கருவியல்ல, அது வாழ்வியல் தத்துவம்

தமிழ் வெறும் கருவியல்ல, அது வாழ்வியல் தத்துவம்

by damith
February 13, 2024 11:16 am 0 comment

இனிய நந்தவனம் ஏற்பாட்டில் அந்தமான் தமிழர் சங்கத்தில் கடந்த 10.-02.-2024 அன்று இலக்கிய சங்கமம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் எல்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்அந்தமான் தமிழர் சங்கச்செயலாளர் கோட்டை காளிதாஸ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.

கவிஞர் இந்திரஜித் சிறப்புரையாற்றினார். அவர் அங்கு உரையாற்றுகையில், “மற்றவர்களுக்கு மொழி கருவியாக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு மொழி வெறும் கருவியல்ல, அது வாழ்வியல் தத்துவம்.

தமிழ் இலக்கியங்கள், பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்வியலை கற்றுத் தருகின்றன. தமிழ் கலாசாரமும்,பண்பாடும் சிறந்த சமூகத்தை உருவாக்குகின்றன. எனவே தமிழ்மொழியின் வளர்ச்சியில்தான் தமிழர்களின் மூச்சே இருப்பதாக பாவேந்தர் பாரதிதாசன் தனது கவிதையில் கூறியுள்ளார்.

‘செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை, மூச்சினை உனக்களிப்பேனே

நீ நய்ந்தால் நய்ந்தே போகும்- என்வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்கும் -தானே’ என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்மொழி வளர்ச்சியின் மீது தமிழ்நாட்டிலும் பிறமொழி திணிப்பு இருக்கிறது. ஹிந்தி திணிப்பு மீண்டும் தலைதூக்குகிறது. சமஸ்கிருத திணிப்பு கூட இருக்கிறது. தமிழ்மொழியின் மூலத்தை அழித்து அதன் வளத்தை சிதைக்கும் முயற்சி இன்று நேற்று நடக்கும் சூழ்ச்சியல்ல. நெடுங்காலமாக நடப்பதுதான்.

வானவியல், கணிதம், மருத்துவம் இப்படி அனைத்து துறைகளிலும் தமிழர்கள் உலகத்திற்கே முன்னோடியாக இருந்தார்கள். தமிழர்களின் மூலத்தை அழிக்க பலவித முயற்சிகள் எடுத்தார்கள்.

வஞ்சகமாக தமிழர்களின் மூலம் அழிக்கப்பட்டு, தமிழ் மூலத்தை திருடி அந்நியர்மொழிகள் தனதாக்கிக் கொண்டன.

பல கட்டங்களில் தமிழ்மொழி மீது தாக்குதல் வந்தபோதும் அதன் சீரிளமை மாறாமல் இருக்க காரணம் நமது மொழி காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் வளம்பெற்றமொழி என்பதனாலாகும்.

முத்தமிழ் இன்று நான்காம் தமிழிலும் கோலோச்சுக்கிறது, உலகம் முழுமையும் கணினித் துறையில் தமிழர்களே திறன்மிக்கவர்களாக உள்ளனர். கணனி தமிழறிஞர் மணவை முஸ்தபாவை நீங்கள் அறிவீர்கள். அவர் 8.6 இலட்சம் தமிழ் கலைச்சொற்களைத் தந்தவர். அவரும் எழுத்தாளர் ஜெயந்தனும் தொடங்கி நடத்திய மணவைத் தமிழ்மன்றத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக நான் இருக்கிறேன். “மொழியை உணர்ச்சிமயமாக பார்க்காதீர்கள், அறிவு பூர்வமாக பாருங்கள்” என்று அவர் சொல்கின்றார்.

இதைதான் பாரதியார் ‘நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றிட வேண்டும்’ என்று அன்றே சொன்னார்.

நித்தம் நித்தம் நமது மொழியை புத்தம் புதிய சக்தியோடு வளர்த்தெடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

பட்டிமன்றப் பேச்சாளர் எல். அசோக்குமார், முனைவர் ரேவதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். அந்தமான் கல்லூரிப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் தமிழ்மொழி வளர்ச்சி குறித்து பயிற்சி வழங்கினார்.

சிறப்பு நிகழ்வாக இனிய நந்தவனம் 27 ஆம் ஆண்டு மலர் அங்கு வெளியிடப்பட்டது. தமிழர் சங்கத் தலைவர் எல். மூர்த்தி மலரை வெளியிட கவிஞர் இந்திரஜித் பெற்றுக் கொண்டார். மேலும் பட்டிமன்ற பேச்சாளர் எல். அசோக்குமார், கனடா எழுத்தாளர் சந்திரசேகரன், கவிஞர் இந்திரஜித் ஆகியோருக்கு ‘வெற்றித்தமிழன்’ விருதும், முனைவர் ரேவதிக்கு’வெற்றித்தமிழினி’ விருதும் வழங்கப்பட்டன.

இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT