Thursday, March 28, 2024
Home » பிறர் மீது அன்பு செலுத்தி வாழ்வதற்கு எம்மை தயார்படுத்த உதவும் தவக்காலம்

பிறர் மீது அன்பு செலுத்தி வாழ்வதற்கு எம்மை தயார்படுத்த உதவும் தவக்காலம்

by damith
February 13, 2024 6:00 am 0 comment

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் இவ்வாண்டின் மாசி, பங்குனி ஆகிய மாதங்களை உள்ளடக்கிய காலப்பகுதியானது மகிமைக்குரிய காலப்பகுதியாகும். கிறிஸ்தவ மக்களால் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் ‘தவக்காலம்’ என அழைக்கப்படும் லெந்து காலம் (lent) இம்மாதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

உபவாசம், ஜெபம் என்பவற்றினூடாக தமது மாம்ச சிந்தைக்குரிய பாவத்திலிருந்து விடுபட்டு இறைவனை அணுகவும், மனிதகுலத்தின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் தன்னை தியாகம் செய்த இறைமைந்தனின் திருப்பாடுகளை தியானித்து பிறர் நலனில் அக்கறை கொண்டு வாழ தம்மைத் தயார்படுத்தவும் கிறிஸ்தவ பாரம்பரிய நடைமுறைகளுள் ஒன்றாக இக்காலப்பகுதி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இவ்வாண்டும்(2024) எதிர்வரும் மாசி 14 முதல் பங்குனி 30 வரை கிறிஸ்தவ மக்களால் தவக்காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. திருச்சபையானது உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்திற்கு முன்னுள்ள 46 நாட்களை அடிப்படையாகக் கொண்டு(ஞாயிற்றுக்கிழமை உட்பட) தவக்காலத்தின் முதல் நாளாகிய விபூதிப் புதன் தினத்தையும்,விபூதிப் புதன் தினத்திலிருந்து உயிர்த்த ஞாயிறு வரையிலுமான ஞாயிற்றுக்கிழமை நீங்கலான 40 நாட்களை தவக்காலம் எனவும் வழமையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

திருவிவிலியத்தின் நற்செய்தி நூல்களின்படி இறைமைந்தன் இயேசுகிறிஸ்து இறைபணியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் 40 நாட்கள் உபவாசத்துடன் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். இதனை நினைவு கூரவும், இறைமகனின் மாதிரியைப் பின்பற்றி உபவாசம்,ஜெபம் என்பவற்றின் மூலம் எம்மைப் புதுப்பித்துக் கொண்டு இறைவனோடு ஒன்றித்து நிற்க வசதியாகவுமே திருச்சபையினால் லெந்து காலம் வகுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

முதல் நாள் விபூதிப்புதன் என்றழைக்கப்படும் கிரியையிலிருந்து ஆரம்பமாகும் தவக்காலமானது கிறிஸ்து உயிர்ப்பின் ஞாயிறு வரை கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. தவக்காலம் அல்லது லெந்து காலமெனப்படும் இக்காலப்பகுதியானது முதல் நாள் சாம்பல் புதன் அல்லது விபூதிப் புதன், முழுமையடையும் நாள் உயிர்த்தெழுந்த ஞாயிறு,இடையே கிறிஸ்து இயேசுவின் எரிசலேம் பவனியை நினைவு கூரும் குருத்தோலை ஞாயிறு,குருத்தோலை ஞாயிறின் பின்னரான தவக்காலத்தின் இறுதிவாரம் பரிசுத்தவாரம் என அடையாளப்படுத்தப்பட்டு கிறிஸ்து இயேசுவின் இறுதி இராவிருந்து,சிலுவை மரணம் என்பவற்றை தியானிக்கும் தினங்களாக முறையே பெரிய வியாழன்,பெரிய வெள்ளி எனும் அடிப்படைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு திருச்சபையின் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தம் பாவ ஜீவியத்திலிருந்து விடுபட்டு இறைவனை நேக்கி மனந்திரும்புவதற்கு அடையாளமே திருச்சபையின் திருநீற்றுப் புதனும் சாம்பல் பூசுதலுமாகும். மனந்திரும்பிய நாளிலிருந்து உபவாசத்திலும் ஜெபத்திலும் தரித்திருந்து திருப்பாடுகளைத் தியானிப்பதுடன் இறைவன் எதிர்பார்க்கும் அடுத்திருப்பவரை நேசித்து நற்காரியங்களில் ஈடுபட இக்காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

திருநீற்றுப் புதனன்று முன்னைய ஆண்டு குருத்தோலை ஞாயிறில் பெறப்பட்டு வீடுகளில் வைக்கப்பட்டிருந்த காய்ந்த ஓலைச் சிலுவைகள் எரிக்கப்பட்டே பூசுவதற்கான சாம்பல் பெறப்படுவது வழமையாகும். தம் மாம்ச உணர்வுகளையும், சுயநலத்தினையும் எரித்துவிட்டு மனம் திரும்பி இறைமகனின் வழியில் தியாகத்தின் வாழ்வினை வாழ்வதற்கு அடையாளமாகவே குருத்தோலை எரித்தலும் சாம்பல் பூசுதலும் பாரம்பரியமாகக் காணப்படுகின்றது.

தவக்காலம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களிலும்,கிறிஸ்தவ மக்களிடையேயும் விசேட வழிபாடுகளும் திருப்பாடுகளின் தியானமும், உபவாச ஜெபங்களும் இறைவன் எதிர்பார்க்கும் நற்காரியங்களும் மேலோங்கிக் காணப்படுவதால் வாழ்வு தூய்மையடைகின்றது.

இறைமகன் தம் பாடுகள் எனும் தியாகத்தின் மூலம் தந்தையாம் இறைவனோடு எம்மை ஒப்புரவாக்கினார் என்பதை நினைக்கவும், உபவாசம், ஜெபம் என்பவற்றுக்கூடாக இறைவனுக்குள்ளான வாழ்வைப் பலப்படுத்திக் கொண்டு கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றி அடுத்திருப்போரை ஆதரித்து அன்பு செலுத்தி வாழவும் தவக்காலம் எம்மை தயார்படுத்தும் காலமாய் அமைந்துள்ளது.

தவக்காலத்தைக் குறிக்கும் லெந்து(lent)எனும் சொல்லானது இலத்தீன் மொழி சொல்லிலிருந்து பிறந்ததாகும். இது வசந்தம் என பொருள் குறித்து நிற்கின்றது. மனித வாழ்வில் பாவ ஜீவியம் மறைந்து இறைமகனின் பாடுகளுக்கூடாக இறைவனுக்குள்ளான வாழ்வு துளிர்விட தவக்காலம் வழிகாட்டுகிறது.

அனைவரின் வாழ்வும் வசந்தமடைய மீண்டுமொரு தவக்காலம் இறைமகனின் தியாகத்தினையும் இறைதியானத்தினையும் எமக்கு நினைவுறுத்தி நிற்கின்றது. பக்திபூர்வமாய் அனுஷ்டித்து நமக்கும் பிறருக்கும் இறையருள் சேர்த்து இறைமகனின் தியாகத்தினை பொருளுள்ளதாக்க இத்தவக்காலம் நமக்கு வழிகாட்டட்டும்!

குழந்தைவேலு சற்குணானந்தன்...? (அதிபர்) அக்கரைப்பற்று

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT