இதற்காகத்தான் ஆசைப்பட்டாய்; மீண்டும் கொழும்பில் அரங்கேற்றம் | தினகரன்


இதற்காகத்தான் ஆசைப்பட்டாய்; மீண்டும் கொழும்பில் அரங்கேற்றம்

மேடை நாடகங்களின் அரங்கேற்றம் அருகி வருகின்ற இந்த கால கட்டத்தில், அண்மையில் கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகத்தில் குறவன், குறத்தியாக நடித்த எஸ். சரவணா, அமுதவல்லி ஆகியோரின் நடிப்பு போற்றுதற்குரியதாக இருந்தது. இந்நாடகத்தை கே. செல்வராஜா இயக்கியிருந்தார். இந்த நாடகத்தில் நடித்தவர்கள் தங்களின் நடிப்புத் திறனை நடிப்பின் மூலம் காட்டியதுடன் திரைமறைவில் பல கலைஞர்கள் தங்களது திறனை வெளிக்காட்டி நாடகம் சிறப்பாக அரங்கேற உதவினார்கள்.

அவ்வாறு திரைமறைவில் தங்கள் பங்களிப்பை நல்குபவர்களை யாரும் கண்டு கொள்ளவதாகத் தெரிவதில்லை. அவ்வாறு திரைமறைவில் தனது திறனை ஒளி, ஒலி அமைப்பு மூலம் வெ ளிக்காட்டிய ஒருவர் கலைஞர் ராதா மேத்தா. நடிகர்களின் நகர்வுகளுக்கும் அசைவுகளுக்கும் ஏற்ப ஒளி, ஒலி அமைப்புகளை வழங்கியவர் அவர். இவரைப்போல் இதற்கு இசையமைத்தவர் கலைவாணி இசைகுழுவின் தாஸ். இவர் சிறப்பாக இசை அமைத்திருந்தார். இதேபோல இந்நாடகத்தின் உதவி இயக்குனர் கலைஞர் கே. ஈஸ்வரலிங்கத்தின் பங்களிப்பும் போற்றுதற்குரியதாக இருந்தது.  

நாடகமொன்று ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை இவர்கள் தங்களது பங்களிப்பை நல்கி வருகின்றவர்கள். நாடகத்தில் நடிப்பவர்கள் தங்களது பாத்திரம் வந்ததும் நடித்துவிட்டு போய் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நாடகமொன்று ஆரம்பித்து முடியும் வரை இயங்கிக் கொண்டிருப்பவர்கள் திரைமறைவில் செயற்படும் இவர்களே. சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துறைராசா சுரேஷ் இவர்களுக்கும் இந்நாடகத்தில் நடித்த நடிகர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது போற்றுதற்குரியது.  இந் நிகழ்வில் பழம் பெரும் கலைஞர்களாகிய கலைச்செல்வன், எஸ்.மோகன்ராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Add new comment

Or log in with...