Home » எக்காலமும் மறக்கப்பட முடியாத மானிட நேயன் மன்னார் முன்னாள் அரசாங்க அதிபர் எம்.எம்.மக்பூல்

எக்காலமும் மறக்கப்பட முடியாத மானிட நேயன் மன்னார் முன்னாள் அரசாங்க அதிபர் எம்.எம்.மக்பூல்

by damith
February 13, 2024 10:55 am 0 comment

நண்பர் மக்பூலுடன் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது இரண்டு பண்புகள் பளிச்சென தெரியவரும். ஒன்று:- அவருக்கு அடிநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களது சுக துக்கங்கள், பிரச்சினைகள் ஆகியன நன்கு தெரிந்திருந்தன. அம்மக்களது பிரச்சினைகளை அவர் உணர்வு பூர்வமாக விளங்கிக் கொண்டிருந்தார். இரண்டு:- தான் எதிர் நோக்கும் எந்தப் பிரச்சினையையும் புலமை நிலைப்பட பார்க்கும் திறன் அவரிடம் இருந்தது. முதலாவது அவரது சொந்த வாழ்க்கையின் அனுபவத்தின் வழியாக வந்தது. இரண்டாவது அவரது கல்வித்திறனால் அவருக்கு கிட்டியது.’

மறைந்த அரசாங்க அதிபர் எம்.எம்.மக்பூல் அவர்களைப் பற்றி உலகறிந்த அறிஞர் மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறிய வாசகங்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவையாகும்.

உயர்ந்த பண்புகளாலும், உன்னதமான சேவைகளாலும் என்றும் எம் மனதில் நிலைத்து வாழ்பவர்களுள் மன்னாரின் முன்னாள் அரசாங்க அதிபர் மர்ஹூம் எம்.எம். மக்பூல் அவர்களும் ஒருவர்.

கடமையை அவர் உயிரிலும் மேலாகக் கருதினார். கடமை அழைத்த போதெல்லாம் நேரம் பாராது அவ்விடத்துக்குச் சென்று இடர் களைவதில் வல்லவர். அவ்வாறுதான் அன்றும் 1988 ஜனவரி 22இல் அவரை அழைத்துச் சென்றனர். இரக்க சிந்தையுடன் கடமையாற்றிய அந்தப் பெருமகனை அழைத்துச் சென்றவர்கள், இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

இவரைத் தொடர்ந்து உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய உதுமான், மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முஹம்மது, மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் வை.அஹமது, குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் இப்ராஹிம், இறுதியாக காத்தான்குடி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நற்பிட்டிமுனை பளீல் ஆகியோர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். முஸ்லிம் சமூகத்தில் வீழ்த்தப்பட்ட இந்த முத்துக்களை, அவர்களது பணிகளை நாம் என்றும் மறந்துவிட முடியாது. உயர் குணம் படைத்த உத்தமராம் எம். எம். மக்பூல், மறைந்து 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

யாழ் மண்ணிலே மீரான் முகிதீன்-_செய்தூன் தம்பதியினரின் மூத்த புதல்வராக ஒரு சாதாரண குடும்பத்தில் 20.04.1942 அன்று மக்பூல் பிறந்தார். இளமைக் கல்வியை யாழ்/ வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் மேற்கொண்டு, அங்கிருந்து 1960 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்துக்கு பட்டப்படிப்பு மேற்கொள்ளச் சென்றார். இறுதிப் பரீட்சையில் மிக சிறப்பாகச் சித்தியடைந்து. 1963 இல் பட்டதாரியாக வெளியேறிய இவர், முதலில் கண்டி கலகெதர முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையை ஆரம்பித்தார். கற்பித்துக் கொண்டே அரச நிர்வாகப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார்.

பின்னர் இலங்கை வங்கியின் பதவிநிலை உத்தியோகத்தராகச் சொற்பகாலம் கடமையாற்றினார். 1967 இல் இலங்கை நிர்வாக சேவைக்குப் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவானார். அதனைத் தொடர்ந்து சம்மாந்துறையில் பிரிவுக் காரியதிகாரியாகக் கடமையேற்று அங்கு மூன்று வருடங்கள் வரை கடமையாற்றினார். பின்னர் கிளிநொச்சிக்கு காணி அதிகாரியாக மாற்றம் பெற்று அங்கு எட்டு வருடங்கள் கடமையாற்றினார்.

இவர் பிரதிக்காணி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று கொழும்புத் தலைமைப் பீடத்துக்கு மாற்றலாகிச் சென்றார். இக்கால கட்டத்தில் நெதர்லாந்துக்குப் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று உயர்பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பினார். பின்னர் 1981 இல் மன்னாருக்கு மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் வகுப்புக்குப் பதவி உயர்வு பெற்ற மக்பூல், 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபராகவும், மாவட்டச் செயலாளராகவும் பதவியேற்று காலமாகும் வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டக் காணியதிகாரியாகக் கடமையாற்றிய வேளையில் இன, மத பேதமற்ற இவரது சேவைகள் மூலம் தமிழ் மக்கள் இதயத்தில் இடம்பிடித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இனமத பேதமற்று பணியாற்றினார்.

முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் அவர்கள் மக்பூலைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘மக்பூல் அவர்கள் தோற்றத்திலும் நடவடிக்கையிலும் முழுமையாக யாழ் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலித்த ஒருவராவார். அவருடைய தமிழ் அறிவும், ஆர்வமும், எளிமையாகப் பழகும் தன்மையும், இனிய குணாதிசயங்களும் மிகவும் போற்றத்தக்கவை’ என விதந்துரைத்துள்ளார்.

ஈழத்தின் நாவல் இலக்கிய முன்னோடியான சுபைர் இளங்கீரன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘மக்பூல் மனிதாபிமானம் மிக்கவர் பாதிக்கப்பட்டவர்களிடம் அவருக்கு மிகுந்த மனிதாபிமானம் இருந்தது. அவரது மனிதாபமானத்தாலும் சமூக உணர்வினாலும் ஆற்றிய சேவைகள் அவையாகும்.’

ஏழைகள் மீது இரக்கம் கொண்ட மக்பூலின் இதயத்திலும், தலைமைத்துவப் பண்பு நிறைந்த அவரது தலையிலும், ஈவிரக்க மற்றவர்கள் துப்பாக்கி ரவைகளால் துளைத்து வீழ்த்திய துயரம் மனிதத்தை நேசிப்பவர்களின் இதயத்தில் என்றுமே மாறாத வடுவாகும்.

கலாபூஷணம் யாழ் அஸீம்-

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT