கெரவலப்பிட்டி கோளாறு; ரூ. 5,223கோடிக்கு மின்சார கொள்வனவு | தினகரன்


கெரவலப்பிட்டி கோளாறு; ரூ. 5,223கோடிக்கு மின்சார கொள்வனவு

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி 300மெகாவோட் மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி தாமதமாகியது தொடர்பாக "கோப்" குழு நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது. 

இம் மின்நிலையத்திலிருந்து மின்சார உற்பத்தி தாமதமடைந்ததால் வேறு இடங்களிலிருந்து அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட வேண்டியிருந்தது. 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை அவ்வாறு வெளி இடங்களில் இருந்து பெறப்படட மின்சாரத்துக்காக அரசாங்கம் 52,230மில்லியன் ரூபாவை செலவிட்டதாக "கோப்" குழு முன்னிலையில் நேற்று முன்தினம் சாட்சியமளித்த இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். 

2016இல் 8560மில்லியன் ரூபா, 2017இல் 19,400மில்லியன் ரூபா, 2018இல் 11,580மில்லியன் ரூபா மற்றும் இவ்வருடம் (2019) ஜனவரி முதல் ஜுலை வரையிலான காலப் பகுதியில் 12,670மில்லியன் ரூபாவை வெளியிடங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ததற்காக அரசாங்கம் செலவிட்டிருப்பதாக அந்த அதிகாரிகள் மேலும் கூறினர்.

சம்பூர் மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து எதிர்பார்த்த மின்சாரம் கிடைக்காததாலும் கெரவலபிட்டிய மின்சார நிலைய நிர்மாண வேலைகள் தாமதமடைந்ததாலுமே வெளியிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேலும் கூறினர்.

அதேவேளை 3000 மில்லியன் ரூபா செலவில் 50 டீசல் மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இதன் மூலம் 39,000 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்ததாகவும் ஆனால் இந்த வருடம் ஜனவரி முதல் ஜுலை மாதம் வரை இந்த ஜெனரேட்டர்கள் பழுதடைந்ததன் காரணமாக 73,398 மணித்தியாலங்கள் செயற்படாமல் இருந்ததாகவும் மின்சார சபை அதிகாரிகள் கூறினர்.


Add new comment

Or log in with...