சவூதி அரேபியா - அபுதாபி இராணுவ கூட்டு நடவடிக்கைக்கு இணக்கம் | தினகரன்


சவூதி அரேபியா - அபுதாபி இராணுவ கூட்டு நடவடிக்கைக்கு இணக்கம்

அயல்நாடுகளின் அச்சுறுத்தல்:

மத்திய கிழக்கில் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்தல்,அயல்நாடுகளின் அச்சுறுத்தல், கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை முறியடிப்பது குறித்து அபுதாபி இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.சவூதி அரேபியாவின் எண்ணெய்க் குதங்கள் மீது கடந்த செப்டம்பர் 14 இல் நடத்தப்பட்ட தாக்குதல்,பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதையடுத்தே இவ்விருவரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.அபுதாபி இளவரசர் ஷேக்மொஹமட்பின் செய்யித் அல்நஹ்யான்,சவூதி அரேபியாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் காலித்பின்சல்மான் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பிராந்திய சவால்களை முறியடிக்க கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது,நாடுகளுக்கிடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்குவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.சவூதி அரேபியாவின் எண்ணெய்க் குதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்புள்ளதாகவும் ஈரானின் இராணுவத் தொழில்நுட்பங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதென்றும் அமெரிக்காவும் சவூதிஅரேபியாவும் நேரடியாகக் குற்றம்சாட்டின.இதை மறுத்த ஈரான், பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் ஜனநாயக நாடொன்றைக் குற்றம் சாட்டுவது அநாவசிய நெருக்கடிகளை ஏற்படுத்துமென எச்சரித்தது.

யெமனிய அரசுக்கு எதிராகப் போராடும் ஹுத்தி போராளிகளுக்கு ஈரான் மறைமுகமாக உதவுவதாக ஏற்கனவே,குற்றச் சாட்டுக்கள் உள்ள நிலையில்,சவூதி,அபுதாபி இளவரசர்கள் பிராந்தியப் பாதுகாப்புக் குறித்துக் கவனம் செலுத்தியுள்ளமை ஈரானைக் குறிவைக்கும் நகர்வுகளென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அயுதங்களின் எச்சங்களை ஆராய்ந்த அமெரிக்கா, ஈரான் அல்லது அதன் நேச நாடுகளின் தயாரிப்பிலான ஆயுதங்களே எண்ணெய்க் குதத்தாக்குதல்களுக்கு

பயன்படுத்தப்பட்டதாக ஊர்ஜிதம் செய்திருந்தது.

யெமனில் போராடும் ஹூதி கிளர்ச்சியாளர்களை வழிக்கு கொண்டு வரும்பொருட்டு சவூதி அரேபியா நடத்திய பேச்சுவார்த்தைகள் உரிய பலனளிக்கவில்லை.பிராந்திய பதற்றத்தை தணிக்கும் சவூதியின் நகர்வுகள் தோல்வியடைந்துள்ளமை, றியாத், வொஷிங்கடன் என்பன நேரடியாக ஈரானைச் சந்தேகித்து அறிக்கை வெளியிட்டமை போன்ற செயற்பாடுகள் மத்திய கிழக்கில் உச்ச பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானும் சவூதிஅரேபியாவும் நேரடிப்போரில் இறங்குவது உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலா மென அஞ்சும் அமெரிக்கா,யெமன் உள்நாட்டுப் போரில் அயல்நாடுகளின் அநாவசியத் தலையீடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு ஆலோசனை பகர்ந்ததற்கிணங்க,சவூதிஅரேபியாவின் நேச அணியிலுள்ள தனது

இராணுவப் பிரசன்னத்தை அபுதாபி அரசாங்கம் குறைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.2015 இல் அமெரிக்காவுடன் செய்து கொண்ட யுரேனியம் செறிவூட்டல் நிபந்தனைகளிலிருந்து ஈரான் விலகியதையடுத்து இப்பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இதுவரை பூரணமாகத் தணியாதுள்ளமை பிராந்தியப்போருக்கு இட்டுச் செல்லுமென அஞ்சப்படும் நிலையிலே சவூதிஅரேபியா,அபுதாபி அரசியல் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்து இராணுவ ஒத்துழைப்புக் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.


Add new comment

Or log in with...