இலங்கை, பாகிஸ்தான் அணிகளுடனான அவுஸ்திரேலிய ரி20 அணி அறிவிப்பு! | தினகரன்


இலங்கை, பாகிஸ்தான் அணிகளுடனான அவுஸ்திரேலிய ரி20 அணி அறிவிப்பு!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிராக விளையாடவுள்ள, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்திரேலிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு, அனைத்து அணிகளும் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20க்கு20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகிவிட்டன.

இதனால், 20க்கு20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு, 20க்கு20 போட்டிக்கான அட்டவணையை தயார் செய்து வருகின்றன.

இதற்கிடையில் உலகக்கிண்ண தொடரை நடத்தும் அவுஸ்திரேலிய அணி, இம்முறையாவது 20க்கு20 உலகக்கிண்ணத்தை வென்றுவிட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது.

இதற்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வரவழைத்து உலகக்கிண்ண தொடருக்கு முன்னோட்டமாக 20க்கு20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கிடையிலான இத்தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் விபரத்தை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

14 பேர் கொண்ட இந்த அணியில், பென் மெக்டர் மோட், 20க்கு20 அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். அவர் இறுதியாக 2018ஆம் ஆண்டு சிட்டினியில் நடைபெற்ற இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.

மேலும், தடையிலிருந்து மீண்டு அசத்திவரும் அனுபவ வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

உலகக்கிண்ண தொடரில் உபாதைக்குள்ளான மார்கஸ் ஸ்டொயினிஸ், இன்னமும் பூரணமாக குணமாகாத நிலையில், அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளரான பில்லி ஸ்டேன்லேக் மற்றும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சட்சனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர் மற்றும் அலெக்ஸ் கெர்ரி ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆரோன் பின்ஞ் தலைமையிலான அணியில், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கெர்ரி, பெட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டர்மோட், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், பில்லி ஸ்டேன்லேக், மிட்செல் ஸ்டாக், ஆஷ்டன் டர்னர், ஹென்ரிவ் டை, ஆடம் செம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியுடனான 20க்கு20 தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி, இத்தொடரை முடித்துக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் விளையாடவுள்ளது.

இதன்முதல் 20க்கு20 போட்டி 27ஆம் திகதி அடிலெய்டிலும், இரண்டாவது 20க்கு 20 போட்டி 30ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்திலும், மூன்றாவது 20க்கு 20 போட்டி நவம்பர் 1ஆம் திகதி மெல்பேர்னிலும் நடைபெறவுள்ளது.

இத்தொடர் முடிவடைந்த பின்னர், அவுஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும்விளையாடவுள்ளது.

இதில் முதலாவதாக நடைபெறும் 20க்கு20 தொடரின் முதல் போட்டி, நவம்பர் 3ஆம் திகதி சிட்னியிலும், இரண்டாவது 20க்கு20 போட்டி நவம்பர் 5ஆம் திகதி கன்பரா மைதானத்திலும், மூன்றாவதும் இறுதியுமான 20க்கு20 போட்டி நவம்பர் 8ஆம் திகதி பேர்த்திலும் நடைபெறவுள்ளது.

அடுத்தான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...