இலங்கை அணியில் இணைய 10 ஆண்டுகள் காத்திருந்தேன் | தினகரன்


இலங்கை அணியில் இணைய 10 ஆண்டுகள் காத்திருந்தேன்

 

பானுக்க ராஜபக்ஷ

இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு சுமார் 10 வருடங்கள் காத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் புதுமுக வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான பானுக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று, பயிற்சியாளர்கள் கொடுத்த தன்னம்பிக்கை இந்த இடத்துக்கு வருவதற்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20க்கு20 போட்டியில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பானுக்க ராஜபக்ஷ, முதல் போட்டியில் 35 ஓட்டங்களையும், (07) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அபாரமாக ஆடி 77 ஓட்டங்களையும் குவித்து அசத்தியிருந்தார்.

போட்டியில் அதிரடி காட்டிய அவர், பாகிஸ்தான் அணிக்கெதிராக இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச 20க்கு20 போட்டியில் ஓட்ட எண்ணிக்கையைப் பதிவுசெய்ததுடன், தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வெற்றி குறித்தும், தனது சர்வதேச அறிமுகம் குறித்தும் பானுக்க ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில்,

”சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ள 10 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் எனது கடவுளை நம்புகிறேன். எனவே, கடவுளின் ஆசிர்வாதத்தினால் தான் சரியான நேரத்தில் வாய்பினைப் பெற்றுக் கொண்டேன். பாடசாலைக் காலம் முதல் இன்று வரை இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய பேர் எனக்கு உதவி செய்துள்ளனர்.

உலகின் முதல்நிலை 20க்கு 20 அணியை வீழ்த்தியது மிகப் பெரிய அனுபவத்தையும் கொடுத்திருந்ததது. உண்மையில் ஒரு அணியாக மாத்திரமல்லாது முழு நாடுமே இந்த வெற்றி குறித்து பெருமையடையும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

”இந்த வெற்றிக்காக முழு அணியின் பங்களிப்பும் கிடைத்திருந்தது. ஒரு புதுமுக வீரராக அதிக நம்பிக்கையுடன் இந்தப் போட்டித் தொடரில் களமிறங்கினேன். அத்துடன். இந்தத் தொடருக்காக இலங்கையில் வைத்து நிறைய பயிற்சிகளை முன்னெடுத்தோம். இந்த அணியை இலங்கையின் இரண்டாம் நிலை அணியென்று தான் சர்வதேச விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர்.

என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அணியாக தொடரை 2--0 என கைப்பற்றி இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளோம். முன்னதாக தனுஷ்க குணதிலக்க கூறியது போல இரண்டாவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் எண்ணத்துடன் தான் நாங்கள் இந்தப் போட்டியில் களமிறங்கினோம். அதேபோல, நாளை (09) நடைபெறவுள்ள 3ஆவது போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்” என அவர் தெரிவித்தார்.

இதேநேரம், 3ஆம் இலக்க வீரராக தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

பாடசாலை நாட்களில் இருந்து நான் 3ஆம் இலக்க வீரராகவே விளையாடி வருகிறேன். இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் மற்றும் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க ஆகிய இருவரும் 20க்க20 போட்டிக்கான அறிமுகத்தை வழங்கிய போது எனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு தெரிவித்திருந்தனர்.

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன என அவர்கள் கேட்டபோது, முடியமான அளவு ஓட்டங்களைக் குவிப்பதற்கு எதிர்பர்த்துள்ளேன் என தெரிவித்தேன். எனவே, ஒரு புதுமுக வீரராக களமிறங்கி இவ்வாறு ஓட்டங்களைக் குவிப்பதென்பது இலகுவான விடயமல்ல. முதல் 20க்கு20 போட்டியின் முதலிரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட போது சற்று மனஅழுத்தத்துடன் தான் நான் விளையாடினேன். அதன்பிறகு எனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைப் பெற்றபோது அது மிகவும் இலகுவாக அமைந்தது” எனக் குறிப்பிட்டார்.

இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு துடுப்பாட்டத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பானுக்க ராஜபக்ஷ பதில் தெரிவிக்கையில், இலங்கை அணிக்குள் இடம்பெறுவதற்கு கடுமையான போட்டி நிலவியது. அதற்காக பலர் தேவையற்ற விடயங்களைத் தெரிவித்தனர்.

ஆனால், அவற்றை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை. எனது வழமையான துடுப்பாட்டத்தை தான் உள்ளூர் போட்டிகளிலும் வெளிப்படுத்தியிருந்தேன்.

நான் முடியுமான வரை கடவுளின் மீது நம்பிக்கை வைத்து எனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்தேன். எனவே அந்த வாய்ப்பு கிடைத்தவுடன் அதற்கான பிரதிபலனையும் பெற்றுக் கொண்டேன்” என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...