Tuesday, April 23, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
February 12, 2024 9:43 am 0 comment

“எச்சில் மயங்க உனக்கு இதனைத் தந்தவரைக் காட்டு” என்று சொல்லி, கையில் எடுத்த ஒரு சிறிய மாறுகொண்டோச்ச, பிள்ளையார் ஆனந்தபாஷ்பஞ் சொரிய உச்சியின் மேல் எடுத்தருளிய ஒரு திருக்கை விரலினாலே சுட்டி, ஆகாயத்திலே இடபாரூடராகி உமாதேவியாரோடு நின்றருளிய பரமசிவனைக் காட்டி, உள்ளே நிறைந்து எழுந்த சத்தியஞானத் திருமொழியினாலே, எல்லையில்லாத வேதத்தினுட்சிறந்த தாற்பரியங்களெல்லாவற்றையும் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுத் தமிழினாலே திருவாய்மலர்ந் தருளுதற்குத் திருவுளங்கொண்டு, அவ்வேதத்திற்கு ஆதியாகிய அக்ஷரத்தை மெய்யோடுபுணர்த்தி, தம்முடைய பாடல் சிவபெருமானுடைய திருச்செவியில் ஏறும் பொருட்டு முன்னர் அத்திருச்செவியையே சிறப்பித்து,

“தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ

னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே”

என்று பாடத் தொடங்கியருளினார். சிவபெருமான் தமக்குப் பிழை செய்த ஆன்மாக்களும் பின் தம்மை வந்தடையின் அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாரென்பதை விளக்கும் பொருட்டு, தம்மை மதியாமல் தாம் வீற்றிருக்கின்ற திருக்கைலாசத்தை எடுத்துத் தன் வலியிழந்த இராவணன் பின் தம்மேல் இசைபாட அவனுக்கு அருள்புரிந்த திறத்தை எட்டாந்திருப்பாட்டிலும், எவ்வகைப்பட்ட சிறப்பினரும் சிவபெருமானை அன்போடு வழிபடினன்றி அவரை அடையார்கள் என்பதை விளக்கும் பொருட்டு, சிவபெருமான் தம்மை வணங்குகின்றவர்களுக்கே அருள்செய்வாரென நினைந்து அவரை வணங்காது வழுவாகிய மானத்தை மேற்கொண்டு மயங்கிய பிரமவிட்டுணுக்கள் இழிவாகிய பன்றியும் அன்னமுமாய்த் தேடியும் அடையாதவர்களாகிப் பின்பு திருவைந்தெழுத்தைத் துதித்தே உய்ந்த திறத்தை ஒன்பதாந் திருப்பாட்டிலும், வேதகாரணராகிய கடவுளை அடையுநெறியை அறிந்து உய்யாத சமணரும், புத்தருமாகிய கையர்களுடைய சமயங்கள் கபட மார்க்கங்கள் என்னுந் திறத்தைப் பத்தாந்திருப்பாட்டிலும், அமைத்துப் பாடியருளினார்.

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT