Saturday, April 20, 2024
Home » தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தர்

தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தர்

by damith
February 12, 2024 6:00 am 0 comment

முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கப்படும் “சுவாமி விபுலானந்தர்” தமிழுக்கு தொண்டாற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர்.

தமிழையே மூச்சென்று சுவாசித்தார். இவர் ஆற்றிய தமிழ் பணிகளும் சமூக சேவைகளும் இவரை உயர் நிலைக்கு இட்டு சென்றது. ஆசிரியராக, தமிழ் பண்டிதராக, விஞ்ஞான பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்து தமிழுக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றினார்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைதீவு எனும் ஊரில் 1892 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 27 ஆம் திகதி இவர் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சாமித்தம்பி தாயின் பெயர் கண்ணம்மா ஆவார்.

இவரது இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும். ஆரம்ப கல்வியை கல்முனை மெதடிஸ் கல்லூரியில் கற்றார். மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியல் பின்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1912 இல் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

இவர் ஒரு தமிழ் ஆசிரியராக மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரியில் தனது கல்விப்பணியை துவங்கினார். பின்பு கொழும்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

மதுரை தமிழ் சங்கம் நடாத்திய தேர்வில் சித்தி பெற்று பண்டிதர் பட்டம் பெற்றார். இலங்கையில் இருந்து இந்த பட்டத்தை பெற்றுக்கொண்ட முதல் நபர் இவராவார்.

யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளினுடைய பழக்கம் துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்தர் ஆக்கியது. இவர் துறவு பூண்டாலும் மக்களை விட்டு விலகவில்லை. சமூகத்தில் நிகழ்ந்த துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் பங்கெடுத்தவராவார்.

ஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலானந்தர் எனும் குரு பட்டத்தை இராமகிருஸ்ணரின் நேர் சீடரான சுவாமி சிவானந்தரிடம் இருந்து பெற்று கொண்டார். “பிரபோத சைதன்யர்” என்ற பெயரையும் பெற்றார். அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி கலாச்சாரத்தில் இருந்த வீழ்ச்சியில் இருந்த தமிழ் சமூகத்தை இவர் தட்டி எழுப்பினார்.

அறிவியல் கல்வியானது தமிழில் போதிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்தது. இவர் அறிவியல் கலை சொல்லாக்கத்துக்காக உழைத்திருக்கின்றார். யாழ்நூல் என்று மிகச்சிறந்த இலக்கியத்தை இவர் படைத்திருக்கிறார்.

இது பழந்தமிழரின் இசைக்கருவியான யாழ் பற்றி சிறந்த ஆராய்ச்சி நூலாக போற்றப்படுகின்றது. 14 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக இந்த நூல் கிடைத்தது. தமிழ்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் எனும் இலக்கியத்தில் பல கட்டுரைகளை இவர் எழுதி இருந்தார்.

இவர் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தெளிவாக கற்று அவற்றின் பெருமைகளை மக்களுக்கும் புரியும் படியாக தனது நூல்களிலும் கட்டுரைகளிலும் இவர் எழுதி இருந்தார்.

மகாககவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் அவரை முதன்மைப்படுத்தி தனது வாழ்வில் வாழ்ந்து காட்டினார்.

தாழ்த்தப்பட்ட மக்களும் மேன்மையடைய வேண்டுமென்று விரும்பினார். நவீன மனிதனுக்குத் தேவையான பழங்கால சிந்தனைகள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ் வாய்ந்தவையாக உள்ளன.

முத்தமிழை முதன்மைப்படுத்தி இவர் எழுதிய நூல்களும் ஆய்வுகளும் பெரும் புகழ் உடையனவாக காணப்படுகின்றன.

இவ்வாறு மிகச்சிறந்த தமிழ்ப்பணிகளை ஆற்றி தமிழையே பெருமைப்படுத்திய விபுலானந்தர் அவர்கள் 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 10 ஆம் திகதி உடல்நலக் குறைவினால் உயிர் இழந்தார்.

இறக்க முன்னரே தான் கனவு கண்ணடதனை போலவே மிகச்சிறந்த தமிழ் பணிகளை இவர் ஆற்றி சென்றிருக்கின்றார்.

இவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் ஈழத்தில் பிறந்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு இவர் ஆற்றிய பணிகள் அளப்பெரிய என்றால் மிகையல்ல.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT