வானுயர்ந்து நிற்கும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி | தினகரன்


வானுயர்ந்து நிற்கும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

125 ஆண்டுகள் வெற்றிப் பயணம்

காந்திமகானின் பாதம்பட்ட கல்விக்கூடம் கல்விமான்களை உருவாக்கிய சாதனைக் கல்லூரி

இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட போது சுதேச மதங்கள், அவற்றின் கலாசாரம், மொழி என்பன நலிவுற்றிருந்தன. ஆங்கிலேயர்கள் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பரப்புவதற்கு கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருந்தனர்.இலங்கை முழுவதும் பல கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி, அதன் மூலம் தமது மதத்தையும், தமது நாட்டு பண்பாடுகளையும் பரப்பியதோடு எமது மதங்களை நசுக்கவும் தொடங்கினர்.

இவ்வாறான நிலையில், இந்து மதத்தையும், தமிழ்மொழியையும், அதன் பண்பாடுகளையும் காப்பாற்றுவதற்கு ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதத்தையே பயன்படுத்தி வடக்கே ஆறுமுக நாவலரும், கிழக்கே விபுலானந்தரும் இந்துப் பாடசாலைகளை அமைத்தனர். இவர்களது முயற்சியால் இந்து மதம் மீண்டும் புத்துயிர் பெற்று எழுச்சி பெறலாயிற்று. அது மாத்திரமின்றி தமிழ்மொழி, பண்பாடு என்பனவும் இப்பாடசாலைகளூடாக வளர்க்கப்பட்டன.

இவ்வாறு தோற்றம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றுதான்  யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி. இப்பாடசாலையை ஸ்தா பித்தவர்,    ஆறுமுகநாவலரின் பிரதம சீடரும், தமிழ்நாடு திருவாவடூதுறை ஆதீனம் நாவலர் பட்டம் வழங்கி கௌரவித்த நால்வரில் ஒருவருமான அம்பலவாண நாவலர் ஆவார்.

சித்தர்கள் வாழ்ந்து பெருமை பெற்ற ஊரான சித்தங்கேணியைச் சேர்ந்த இவர், 1894ஆம் ஆண்டு தனது பணத்தில், சொந்த நிலத்தில் ஓர் திண்ணைப் பாடசாலையாக இதனை அமைத்தார். அன்று திண்ணைப் பாடசாலையாக அமைக்கப்பட்ட இப்பாடசாலை, ஓர் நூற்றாண்டு கடந்து இரண்டாம் நூற்றாண்டிலும் கால் நூற்றாண்டை நிறைவு செய்து விருட்சமாய் உயர்ந்து நிற்கிறது.

இன்றைய தினத்துடன் (09.10.2019) 125ஆண்டுகளை நிறைவு செய்யும் இப்பாடசாலை வெறுமனே கல்வி போதிக்கும் கல்விச்சாலையாக மாத்திரமாக இல்லாமல் சுதேசிய எழுச்சியின் சின்னமாகவும் மிளிர்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் 'தங்கத் தாத்தா' எனக் கொண்டாடப்படும், "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே.." என்ற புகழ் பெற்ற சிறுவர் பாடலை எழுதிய நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நாற்பது ஆண்டுகளாக தமிழ் கற்பித்த பெருமை இப்பாடசாலைக்கு உண்டு.

அவர் மாத்திரமின்றி, கடந்து வந்த 125ஆண்டுகளிலும் பல ஆசிரியர்கள், அதிபர்கள் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காவும், மாணாக்கர்களது கல்விக்காகவும், இந்து மதத்தின், இனத்தின் பண்பாடுகளை பேணிப் பாதுகாக்கவும் தம்மை உருக்கி உழைத்திருக்கிறார்கள். இப்போதும்  பலர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அகிம்சையை உலகுக்குப் போதித்த மாகாத்மா காந்தியும் தனது இலங்கை விஜயத்தின் போது இப்பாடசாலைக்கு வந்துள்ளமை சிறப்பம்சமாகும். இப்பாடசாலையில் கல்வி கற்ற பல்லாயிரம் மாணவர்கள் உலகம் முழுவதும் இப்பாடசாலையின் விழுதுகளாக இருக்கிறார்கள். இன்று இலங்கையில் இருக்கக் கூடிய பதினைந்து பல்கலைக்கழகங்களில் பதினான்கு பல்கலைகழகங்களிலும் இக்கல்லூரியின் மாணவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம் பல மாணவர்கள் நாட்டில் உயர் அரச பதவிகளிலும், நாட்டின் நிர்வாக சேவைகளிலும், பொறியியல், மருத்துவ, சட்டத் துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, புலம்பெயர் தேசங்களிலும் இக்கல்லூரியின் மாணவர்கள் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நூற்றாண்டு நிறைவுக்குப் பின்னர் இப்பாடசாலை பல்வேறு அரச திட்டங்களின் கீழ் உள்வாங்கப்பட்டு பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் பலமிக்கதாக்கப்பட்டன. 'நவோதயா' திட்டத்தின் கீழும் அதனைத் தொடர்ந்து 'ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழும் (இத்திட்டத்தின் கீழே ஆரம்பப் பிரிவு பாடசாலை தனியாக்கப்பட்டு இப்பாடசாலை தனியே உயர்தரப் பாடசாலையாக மாற்றமடைந்தது.) அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது சங்கானை கோட்டத்தில் 1AB Super Grade பாடசாலையாகவும் E- – Libary உள்ள ஒர் பாடசாலையாகவும் காணப்படுகிறது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் இணையப் பரீட்சைகள் நடத்துவதற்கு தகுதி உடைய வளம் கொண்ட பாடசாலையாக இப்பாடசாலை தெரிவு செய்யப்பட்டு பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

புதிதாக உயர்தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடமான தொழில்நுட்ப பாடத்திற்கென விஷேடமாக அமைக்கப்பட்ட ஆய்வுகூடத் தொழில்நுட்ப பீடம் காணப்படுவதுடன் உயர்தரத்தில் அனைத்து துறைகளுக்குமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளும், ஆசிரியர் வளமும் கொண்ட  பாடசாலையாகவும் காணப்படுகிறது.

தற்போது 1200மாணவர்களுக்கு மேல் கற்பதுடன் 66ஆசிரியர்களையும் 7கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டதாகக் காணப்படுகிறது. தேசிய பாடசாலை என்ற நிலைக்கு மிக அண்மையாகச் சென்றுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையால் அந்நிலையை அடைவது தாமதப்படுகிறது. எனினும் எதிர்வரும் ஆண்டு தேசிய பாடசாலையாக இது தரமுயர்த்தப்படும் என்ற நம்பிக்கை பாடசாலை சமூகத்திடம் உள்ளது. 125ஆண்டுகளை நிறைவு செய்து உயர்ந்து நிற்கும் இப்பாடசாலையின் மாணவர்கள் எனக் கூறிக் கொள்வதில் இங்கு கற்ற ஒவ்வொரு மாணவரும் பெருமைப்படுகின்றனர். இன்னும் பல நூறு ஆண்டுகள் இப்பாடசாலை நிலைத்திருந்து கல்வியையும்,  இனத்தின் மொழி, பண்பாடு, தனித்துவங்களையும் வளர்த்திட வேண்டும் என பிராத்திப்போம்.

இந்துவின் முத்துக்கள் நாம் என்று உரக்கச் சொல்வோம் எப்போதும்.

ரி.விரூஷன்
(பழைய மாணவன்)  

 


Add new comment

Or log in with...