போதைப் பழக்கம் இல்லாத சாரதிகள், நடத்துநர்களை தேடிப் பிடிப்பது சிரமம்! | தினகரன்


போதைப் பழக்கம் இல்லாத சாரதிகள், நடத்துநர்களை தேடிப் பிடிப்பது சிரமம்!

'வாகன சாரதி ஒருவர் போதைவஸ்து பாவித்துள்ளாரா என்பதை பரிசோதனை செய்வதற்கான கருவி பொலிசாரிடம் இல்லாதது எமது நாட்டில் பெருங்குறை'

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவுடன் சந்திப்பு

'இலங்கையில் உள்ள தனியார் பஸ்களில் சேவையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களில் பெரும்பாலானோர் போதைவஸ்து பாவனையில் ஈடுபடுவோராவர்' என்று கூறுகிறார் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன.

இவ்வாறான சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் கடமையில் உள்ள நேரங்களிலும் போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது இந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு தான் தொடர்ந்து கூறிவருகின்ற போதிலும் அதனை எவரும் கேட்பதில்லை என்றும் கெமுனு விஜேரத்ன மேலும் கூறுகிறார்.

தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் இந்தப் பழக்கத்துக்கு பல காரணங்கள் இருப்பதாகக் கூறும் கெமுனு விஜேரத்ன அவற்றைப் பற்றி இங்கு விபரிக்கிறார்

"இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு உரிய தரிப்பிடங்கள் உள்ளன. ஆனால் தனியார் பஸ்களை நிறுத்துவதற்கான உரிய தரிப்பிடங்கள் இல்லை.நேரசூசி சரியாக பின்பற்றப்படுவதில்லை. அதற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் மோசமாக உள்ளது. இது போன்ற விடயங்களும், வேறு சில விடயங்களும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை விரக்தி நிலைக்குத் தள்ளியிருப்பதுடன் அவர்களை போதைப் பழக்கத்துக்கும் ஆளாக்கியிருக்கின்றன. இது இத்துறையை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. போதைப் பழக்கம் இல்லாத சாரதிகள் மற்றும் நடத்துனர்களை தேடிப் பிடிப்பது இப்போது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது" என்கிறார் அவர்.

"தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் போதைப் பழக்கம் வாகன விபத்துகள் அதிகரிப்பதற்கு கரணமாகியுள்ளதா?" என்று கேட்கப்பட்ட போது அது பற்றி சரியாகக் கூற முடியாமல் உள்ளதாக கெமுனு விஜேரத்ன கூறினார்.

"வாகன சாரதிகள் போதைவஸ்து பாவிப்பதை பரிசோதனை செய்ய பொலிஸாரிடம் எந்தவித உபகரணங்களும் இல்லை. எனவே போதைவஸ்து பாவனை மூலம் விபத்துகள் ஏற்படுகின்றனவா என்பதை சரிவரக் கூற முடியாதுள்ளது" என்று கெமுனு விஜேரத்ன கூறுகிறார்.

"பொலிஸாரும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். சாரதி ஒருவர் போதைவஸ்து ஒன்றை பாவித்திருக்கிறார் என்பதை நிரூபிப்பது மிகவும் சிரமமான விடயம். சாரதி ஒருவர் போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டிருப்பதாக பொலிஸ்காரர் ஒருவர் சந்தேகித்தால் சந்தேகத்துக்குரிய சாரதி மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் சந்தேகத்துக்குரிய சாரதி மருத்துவ அதிகாரி ஒருவர் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு, அவர் மீது பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். மேற்படி பரிசோதனையின் போது உடலில் குறிப்பிட்ட போதைவஸ்து கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்ட பின்னரே அந்த சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

மேற்படி நடைமுறை மிகவும் சிக்கலானது என்பதால் போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டார் என்று இலங்கையில் சாரதிகள் மீது பரிசோதனைகள் நடத்தப்படுவது மிகவும் அபூர்வமானது என்று போக்குவரத்து பொலிஸார் ஒருவர் கூறுகிறார்.

மேற்குறிப்பட்ட விடயங்கள் காரணமாக சாரதிகளின் போதைவஸ்து பாவனையை பரிசோதிக்கும் கருவிகளை போக்குவரத்து பொலிஸாருக்குப் பெற்றுத் தருவதற்கு பொலிஸ் திணைக்களம் முயற்சித்து வந்தாலும் அந்தத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.

வாகன சாரதிகள் போதைவஸ்து பாவித்துக் கொண்டு வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் அது மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் 152 (1) பரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் அவ்வாறான போதைவஸ்து பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதியின் மீது சோதனை நடத்துவதற்கு தேவையான உபகரணங்களோ அல்லது வழிமுறையோ பொலிஸாரிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா மற்றும் ஹெரோயின் ஆகிய போதைவஸ்து பொருட்கள் நாட்டின் பல இடங்களில் உள்ளன. தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அவற்றைப் பாவிக்கக் கூடும். சாரதிகள் அவற்றை பாவிப்பதால் விபத்துக்கள் ஏற்படலாம். மேற்குறிப்பட்டது போன்ற 9 வகையான போதை வஸ்துகளைக் கண்டறியக் கூடிய உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் வேறு நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. எனினும் எமது நாட்டில் அவ்வாறான சாதனங்கள் இல்லாத போதிலும், போதைவஸ்து பாவனையுடன் வாகனம் அல்லது பஸ்ஸை செலுத்தும் சாரதி மருத்துவ சோதனையின் பின்னர் அவ்வாறு போதைவஸ்து பாவனையில் இருந்து நிரூபிக்கப்பட்டால் அவரது வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறுகிறார்.

அதேநேரம், பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வருட இறுதிக்குள் போதைவஸ்து பாவனை தொடர்பான மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறுகிறார். அத்துடன் அவ்வாறான சாரதிகளை மருத்துவ சோதனைகளுக்குட்படுத்த உதவும் வகையில் பறக்கும் படை உத்தியோகத்தர்கள் நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறுகிறார்.


Add new comment

Or log in with...