நவீன தகவல் தொடர்பாடல்களின் மத்தியிலும் தபால் சேவை தனித்துவம் | தினகரன்


நவீன தகவல் தொடர்பாடல்களின் மத்தியிலும் தபால் சேவை தனித்துவம்

உலக அஞ்சல் தினம் இன்று

சர்வதேச அஞ்சல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.ஒக்டோபர் 9ம் திகதியை உலக அஞ்சல் தினமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது.

உலகில் ஒரு கண்டத்தில் வசிக்கும் ஒருவர் இன்னொரு தேசததில் உள்ளவரோடு தொடர்பைப் பரிமாறிக் கொள்ளும் வழிமுறைகளில் முக்கியமானது அஞ்சல் சேவையாகும். தற்போது விஞ்ஞான தொழில்நுட்பம் உச்சக் கட்டத்திற்கு வளர்ந்துள்ள போதிலும் மூலப்பிரதி அவசியமாகத் தேவைப்படுகின்றது. தொலைதூரத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான ஆவணங்களைக் கொண்ட கோவைகள் வான் கடிதம் வாயிலாகவும் உரியவரிடம் சென்றடைகின்றன. அஞ்சல் சேவையின் மகத்தான சேவைகளிலொன்று மக்களிடையே குறைந்த கட்டணத்தில் தொடர்பாடல்களை ஏற்படுத்துவதாகும்.

உலகில் முதன் முதல் முத்திரை வெளியிட்ட பெருமை பிரித்தானியாவைச் சேர்ந்த றோலண்ட் ஹில் என்பவரையே சாரும். இந்த அஞ்சல் தலையில் விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இம்முத்திரை 1740ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்தில் உள்ள தபால் நிலையங்களில் முதன் முறையாக விற்பனைக்கு விடப்பட்டது. ஆரம்பத்தில் இத்தபால் தலையை செல்லுபடியற்றதாக்குதற்கு கறுப்புமையையே உபயோகிக்கத் தீர்மானித்தனர். 1760ம் ஆண்டு அஞ்சல் சேவைக்கு ஓர் புரட்சியைத் தோற்றுவித்த றோலன்ட் ஹில்லிற்கு இங்கிலாந்து அரசாங்கம் ‘சேர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஆதி காலத்தில் அஞ்சல் பரிவர்த்தனைக்கு புறா, அன்னப்பட்சி என்பன பயன்படுத்தப்பட்டதாக சரித்திரம் கூறுகின்றது. இதனை அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு நினைவுகூருமுகமாகத்தான் தற்போது இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் இலச்சினையில் புறா உன்னத இடத்தை வகிக்கின்றது.

இங்கிலாந்தில் இடம்பெற்ற அஞ்சல் சேவையை அந்நாட்டு மக்கள் ‘றோயல் மெயில்’ என்றே அழைத்தனர். இலங்கை குடியரசு ஆவதற்கு முன்னர் நடைபெற்று வந்த தபால் சேவையையும் றோயல் மெயில் என்று குறிப்பிட்டதாக வரலாறு சான்று பகர்கின்றது. அஞ்சல் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அனைத்து மாகாணங்களுக்கும் தபால் புகையிரதம் சேவையாற்றியது. தற்சமயம் தபால் சேவையை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில் சிறிய ரக வான்களை தபால் திணைக்களம் கொள்வனவு செய்துள்ளது. இதன் மூலம் நகரப் பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சல் நிலையங்களில் மேலதிக தபால் கட்டணத்தைச் செலுத்தி ‘ஸ்பீட் போஸ்ட்’ மூலம் துரித தபால் பரிவர்த்தனை நடைபெறுவதையும் காண முடிகிறது.

தபால் நிலையங்களுக்கான குறியீட்டு இலக்கங்கள் முறைமை பூரண வெற்றி அளிக்கவில்லையென்றே கூற வேண்டும். இக்கூறியீட்டு இலக்கத்தை மக்கள் பயன்படுத்துவதாகத் தகவல் இல்லை.அஞ்சல் குறியீட்டு இலக்கத்தின் மகத்துவம் பற்றி மக்கள் அறிந்திருப்பது நல்லது. தபால் தரம் பிரிக்கும அஞ்சல் ஊழியர்கள் குறியீட்டு இலக்கம் இல்லாததால் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் எனலாம். நம்நாட்டில் ஒரே பெயருடைய பல கிராமங்கள் உள்ளன. கொக்குவில்,களுதாவளை, புதுக்குடியிருப்பு போன்ற பெயர்களில் பல ஊர்கள் உள்ளன.

நவீன இலத்திரனில் தொழில்நுட்பம் தபால் திணைக்களத்திற்கு உதவி புரிகிறது.இலத்திரனியல் ஊடாக காசுக்கட்டளையை அனுப்பி வைக்கும் நடைமுறையை அஞ்சல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நொடிப்பொழுதில் காசுக்கட்டளை பரிமாற்றம் நிகழ்ந்து வருகின்றது.

மக்களுக்கு சிறந்த சேவையினை நல்கும் நோக்கத்தோடு முகவர் தபால் நிலையங்களையும் இயங்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. மகத்தான வரலற்றைக் கொண்ட அஞ்சல் சேவை மேலும் விருத்தியடைய அஞ்சல் வாடிக்கையாளர் உறுதுணை புரிய வேண்டும்.


Add new comment

Or log in with...