பாண்டிருப்பு தீப்பள்ளயம் உற்சவம் | தினகரன்


பாண்டிருப்பு தீப்பள்ளயம் உற்சவம்

இன்று வனவாசம்

மன்னன் விமலதர்ம சூரியன் வழிபட்ட வரலாற்றுத் தொன்மை மிக்க திரௌபதையம்மன் ஆலயம்

நாளைமறுதினம் தீ மிதிப்பு

நீண்ட கால தொன்மை வாய்ந்தது பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம். திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஆலய உற்சவத்தின் சிகரம் என வர்ணிக்கப்படும் பாண்டவர்கள் திரௌபதையம்மன் சகிதம் தேவாதிகள் தீயில் இறங்கும் தீமிதிப்பு வைபவம் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

கிழக்கில் மக்கள் கிராமிய வழிபாட்டையே பெரிதாகப் போற்றி வருகின்றனர். இம்மக்கள் சக்தி வழிபாட்டில் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பதை இங்குள்ள கிராமங்கள் தோறும் அமைந்துள்ள சக்தி ஆலயங்கள் பறைசாற்றி நிற்கின்றன.

அந்த வகையில் கண்ணகி அம்மன், காளி அம்மன், மாரி அம்மன், மீனாட்சிஅம்மன், பேச்சிஅம்மன், நாககன்னி அம்மன், திரௌபதை அம்மன் என ஆலயங்களை நிறுவி அதன் மூலம் தமது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

சக்தி ஆலயங்களில் உற்சவம் ஆரம்பமானால் மிகுந்த பயபக்தியுடன் மக்கள் வழிபாட்டில் ஒன்றித்து விடுகின்றனர். தமது உள்ளத்தையும், இல்லத்தையும், கிராமத்தையும் தூய்மையாக வைத்திருப்பதுடன், சில ஊர்க்கட்டுப்பாடுகளை விதித்து புனிதமாக வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அம்மன் அருளாள் தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இது காலங்காலமாக மக்கள் மத்தியில் நிலவி வரும் தெய்வ நம்பிக்கையாகும்.

கிழக்கில் மிகத் தொன்மையான ஆலயங்கள் சில அமைந்துள்ளன. மட்டக்களப்பிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது வர்த்தக நகரான கல்முனை. கல்முனை நகரில் இருந்து வடக்கே ஓரிரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது ப​ைழமை வாய்ந்த பாண்டிருப்பு கிராமம். இங்குதான் ப​ைழமையின் பெருமை கூறும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 'தீப்பள்ளயம்'என்றால்தான் அனைவருக்கும் தெரியும். இங்கு நடைபெறும் பூசை வழிபாடுகள் ஏனைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டுள்ளன.

திரௌபதை அம்மனை மன்றாடி வந்தனை செய்து வழிபடுகின்ற மரபு விசேடமானது. பாண்டவர் வேடம் பூண்டு நிற்கின்றவர்களுக்கு இங்கு விசேட பூசைவழிபாடுகள் நடைபெறுகின்றன. மனிதனை தெய்வமாக பூஜிக்கும் மகாசக்திஆலயமாக திரௌபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

மகாபாரதக் கதையை மையமாக வைத்து 18 தினங்கள் ஆலய உற்சவங்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் முதன்முதலில் திரௌபதை அம்மனுக்கென ஆலயம் அமையப் பெற்றது பாண்டிருப்பிலேயாகும். தாதன்மாமுனியும் அவனதுஆட்களும் வடஇந்தியாவின் கொங்குநகரில் இருந்து கப்பலேறி புறப்பட்டு இலங்கையின் கிழக்குக் கரையை வந்தடைந்தனர். மட்டக்களப்பு பகுதியிலில் கரைதட்டி புறப்பட்ட தாதன்மா முனிவன் அந்நாளில் நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோவிலைச் சென்றடைந்து, அங்கு தங்கியிருந்து மகாபாரதக்கதையை மக்கள் மத்தியில் பரப்பி வரலானான்.

இந்தியாவிலிருந்து தாதன் என்பவன் இங்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்த மாருதசேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கன் (கி.பி.1539-_கி.பி. 1583 வரை) தாதனைக் கண்டு அவனது நோக்கம் பற்றி விசாரித்துஅறிந்து கொண்டான். தாதனும் தனது வருகையின் நோக்கம் பற்றி மன்னனிடம் எடுத்து இயம்பினான். அத்தோடு தமது வழிபாட்டிற்குகந்த இடம் ஒன்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டான்.

எதிர்மன்னசிங்கனும் தாதனின் விருப்பப்படிஅவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கடல் வழிப் பயணம் செய்த போது அருகே கடலும் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நாவல் மரங்களும் மேற்கே அடர்ந்த வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு இறங்கி அங்கேயே தங்கி தான் கையோடு கொண்டு வந்திருந்த விஷ்ணு, திரௌபதை, பாண்டவர்கள் சிலைகளை வைத்து கொக்கட்டிமரத்தடியில் கொத்துப் பந்தலிட்டு வழிபாடு நடத்தி வந்தான்.

மன்னனும் தாதனின் வழிபாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினான். இதேவேளை திரௌபதைஅம்மனின் மகிமையை அறிந்து கொண்ட கண்டி இராச்சியத்தை ஆட்சி புரிந்த மன்னன் விமலதர்மசூரியன் (கி.பி.1594-_கிபி 1604) இங்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு பொன், வெள்ளி பொருள் கொடுத்து சென்றதாக கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகின்றது.

ஆரம்பத்தில் 'தாதன் ஆலயம்' என அழைக்கப்பட்ட இவ்வாலயம் பின்பு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் எனப் பெயர் பெற்றது.

ஆலயத்தின் பிரசாதமாக மருத்துவ மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வாசனைமிக்க 'பாண்டாரப் பொட்டு' அற்புதம் மிக்கதும் பிணிதீர்க்கும் அருமருந்தாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் மிக நீண்ட தீக்குழியைக் கொண்ட ஆலயமாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பெண்கள் தீமிதிப்பில் ஈடுபட முடியாது. ஆலய உற்சவ காலங்களில் பாண்டவர்கள், திரௌபதை, கண்ணன், தேவாதிகள் என ஆலயத்தில் கட்டுக்கு நிற்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாது.

ஆலய உற்சவத்தின் 18 நாட்களில் முக்கிய வழிபாடாக முதலாம் நாள் பூர்வாங்க கிரியைகள், திருக்கதவு திறத்தல், பாண்டவர்கள் கடல் குளித்து ஆயுதம் கழுவி வந்து ஊர்க்காவல் பண்ணல் கொடியேற்றம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மூன்றாம் நாள் மகாபாரத பாராயண ஏடு திறத்தல் இடம்பெறும். ஏழாம் நாள் சுவாமி எழுந்தருளல் பண்ணல் ( ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் எழுந்தருளல்) நிகழ்வு மிகவும் சிறப்பாக பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இடம்பெறுகின்றது. எட்டாம் நாள் நாட்கால் வெட்டல் நிகழ்வு இடம்பெறும். 12ம் நாள் கலியாணக்கால் வெட்டல் நிகழ்வும் , 16ம் நாள் பாண்டவர்கள், திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல் நிகழ்வும், 17ம் நாள் அருச்சுனன் தவநிலை செல்லல் காட்சியும், 18ம் நாள் மாலை தீமிதிப்பு வைபவமும் இடம்பெறுகின்றன. மறுநாள் தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயச் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறுகின்றது.

மகாபாரதத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடைபெற்ற போரில் பாண்டவர்கள் சந்தித்த சத்திய சோதனைப் பயணங்களை எடுத்துக்காட்டும் வகையிலே திரௌபதை அம்மன் உற்சவம் அமைந்துள்ளது.

இதில் முக்கிய திருவிழாவாக பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் தவநிலை செல்லல், பாண்டவர்கள் திரௌபதை சகிதம் தீப்பாய்தல் ஆகிய நிகழ்வுகள் உற்சவ காலத்தின் இறுதி மூன்று தினங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்காலப்பகுதியில் நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பக்தர்கள் பாண்டிருப்புக்கு வருகை தருவார்கள். பாண்டிருப்பு மட்டுமல்ல கல்முனைப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டிருக்கும்.

அற்புதமும், மகிமையும், ப​ைழமையும், புதுமையும் நிறைந்த மகாசக்தி ஆலயமாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் திகழ்கின்றது.பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல் நிகழ்வு இன்று 09 ஆம் திகதியும், நாளை 10 ஆம் திகதி அருச்சுனன் பாசுபதம் பெறத் தவம் செய்தலும் அரவாணைக் களப்பலியிடல் நிகழ்வும், 11 ஆம் திகதி மாலை பாண்டவர்கள் திரௌபதை தேவாதிகள் சகிதம் தீமிதித்தல் நிகழ்வும் 12 ஆம் திகதி காலை பாற்பள்ளயமும், தருமருக்கு முடி சூட்டுதலும், இரவு அம்மனின் ஊர்வலமும் நடைபெற்று உற்சவம் நிறைவு பெறும்.


Add new comment

Or log in with...