ரயில் சேவை இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு | தினகரன்


ரயில் சேவை இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும், ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பவில்லையெனப் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

நேற்றைய தினமும் பல ரயில் சேவைகள் இடம் பெறவில்லையென்றும், பல மணி நேரம் ரயில் நிலையங்களில் காத்திருந்ததாகவும் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.  

பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட போதி லும், சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நேற்று இடம்பெறவில்லையென ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.  ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவதிலிருந்த தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகளை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இன்று புதன்கிழமை முதல் நாடு முழுவதும் வழமையான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுனார்.  

சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரி, ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் 12நாட்களாக முன்னெடுத்திருந்த போராட்டம் நேற்று முன்தினத்துடன் கைவிட்டிருந்தன. அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதன் அடிப்படையிலேயே இவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.  

இவ்விடயம் தொடர்பில், ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொடவிடம் வினவிய போது,  

அரசாங்கத்தின் சம்பள ஆணைக்குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட வேண்டிய இடத்தில் இல்லை. அவை ஒவ்வொரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சில ரயில்களில் திருத்தப்பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் இன்று முதல் ரயில்கள் வழமை போன்று செயற்படுமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...