வரவு செலவுக்கு மேலதிகமாக ரூ. 21கோடி குறைநிரப்பம் | தினகரன்


வரவு செலவுக்கு மேலதிகமாக ரூ. 21கோடி குறைநிரப்பம்

பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தினால் 2141கோடியே 53இலட்சத்து 88ஆயிரம் ரூபாவுக்கான குறை நிறைப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

வரவு செலவுத் திட்ட செலவின தலைப்பு 240ன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இந்த குறைநிறைப்பு பிரேரணையை காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  

இதற்கிணங்க மரணமடைந்த மற்றும் காயங்களுக்குள்ளான படையினருக்கு நஷ்டஈடு வழங்கல் உள்ளிட்ட இராணுவத்தினரின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக 209, 610,000.00 (20கோடிக்கு அதிகமான) நிதியை விரைவில் ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

அதனோடிணைந்ததாகப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 2500ரூபாவை மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக வழங்க 124கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு  அரசாங்கம் உத்தேசித்துள்ளது.  

அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 2500ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு மேலதிகமாக மேற்படி நிதி ஒதுக்கப்படவுள்ளது.  

இதற்கிணங்க அரசாங்க ஊழியர்களுக்கு 2500ரூபா இடைக்கால மாதாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு மேல் மாகாண சபைக்கு 1,148,750,000.00ரூபாவையும் தென் மாகாண சபைக்கு 88,500,000.00ரூபா,  வட மாகாண சபைக்கு 507, 500,000.00ரூபா, வட மேல் மாகாணத்திற்கு 682, 500,000.00ரூபாவையும் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதேவேளை கடல் பாதுகாப்பு கரையோரப் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்திற்கு 6,220,000.00ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

வருடாந்த வரவு செலவுத் திட்டத்திற்கு மேலதிகமாக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை மூலம் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

இதற்கிணங்க ஜனாதிபதியின் உபயோகத்திற்காக பாதுகாப்பான இரண்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பத்து கோடியே பத்து இலட்சம் ரூபாவும் மின்வலு எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் 2019/7/23ம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கமைய உத்தேச அலுவலக கட்டிட வாடகை கொடுப்பனவுக்காக மேலதிக நிதியாக 20கோடி ரூபாவும் விமானப்படைக்கு 40மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்ய மேலதிக ஒதிக்கீடாக ஒரு கோடியே 81இலட்சம் ரூபாவும் வெளிவிவகார அமைச்சுக்கு பொருளாதார இராஜதந்திர செயற்பாட்டு கருத்திட்ட நடவடிக்கை பற்றாக்குறையை  ஈடு செய்வதற்காக நான்கு கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.  

நாட்டின் 25மாவட்டங்களுக்கும் பசுமை சமூக புரட்சி வேலைத் திட்டத்திற்கான ஒதுக்கீடு தொடர்பிலும் மேற்படி குறைநிரப்பு பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நேற்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி எம்பி பிமல் ரத்நாயக்க இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு எதிர்வரும் நாட்களில் நிதியமைச்சர் பதில் வழங்குவார் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க சபையில் தெரிவித்தார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்,  ஷம்ஸ் பாஹிம்  


Add new comment

Or log in with...