மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உட்பட 49 பேர் மீது வழக்கு | தினகரன்


மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உட்பட 49 பேர் மீது வழக்கு

'கும்பல் தாக்குதல்கள் மற்றும் கும்பல் கொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள்' என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிகின்றன. 

சமீபகாலமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள், கும்பல் கொலைகள் நடைபெறுகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உ.பி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில், கும்பல் கொலைக்குப் பலர் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், 'கும்பல் கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, நடிகைகள் அபர்ணா சென், ரேவதி உட்பட பல்வேறு துறைகளில் பிரபலங்களாக விளங்கும் 49பேர், பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினர்.கும்பல் கொலைகள் மற்றும் கும்பல் தாக்குதல்களுக்கு நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்கள். அது மட்டும் போதாது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று 49பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தக் கடிதத்துக்கு பதிலடியாக, பா.ஜ.க-வுக்கு ஆதரவான திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 62 பிரபலங்கள் கடிதம் எழுதினர். அது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இந்நிலையில், பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீதும் பீகார் மாநிலத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 


Add new comment

Or log in with...