2nd T20; SLvPAK: இலங்கை அணி வெற்றி; தொடரையும் வென்று சாதனை | தினகரன்


2nd T20; SLvPAK: இலங்கை அணி வெற்றி; தொடரையும் வென்று சாதனை

2nd T20; SLvPAK: இலங்கை அணி வெற்றி; தொடரையும் வென்று சாதனை-3rd T20-SLvPAK-SL won by 35 Runs and Seal the Series as 2-0
அடுத்தடுத்த 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய வணிந்து ஹசரங்க...

  • பாகிஸ்தான் உடனான தொடரை முதல் தடவை வெற்றி
  • ஹசரங்க, பிரதீபின் பந்துவீச்சு; பானுகவின் துடுப்பாட்டத்தால் பாகிஸ்தானை மிரளவைத்தது

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இலங்கை அணியின் சார்பில் பானுக ராஜபக்‌ஷ 48 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்றார். கடந்த போட்டியில் ரி20 அறிமுகத்தை பெற்ற 27 வயதான பானுக ராஜபக்‌ஷ, தனது 2 ஆவது ரி20 போட்டியிலேயே சர்வதேச ரி20 அரைச்சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஷெஹான் ஜயசூரிய 34 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தசுன் ஷானக ஆட்டமிழக்காது 15 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் இமாத் வசீம், வஹாப் றியாஸ், ஷாதாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

அவ்வணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் 10 இற்கும் குறைவான ஓட்டத்தை பெற்ற நிலையில், நடு வரிசை ஆட்டக்காரர்களால் சற்றே நிதானமாக விளையாடிய போதும், ஏனைய வீரர்களால் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் போனது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஆகக்கூடுதலாக, இமாத் வசீம் 29 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, ஆசிப் அலி 29 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் 4 விக்கெட்டுகளையும் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், இசுறு உதான 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் சிறப்பம்சமாக, 8ஆவது ஓவரை வீசிய வணிந்து ஹசரங்க ஹட்ரிக்கை தவறவிட்டபோதும் நான்கு பந்துகளில் (7.3, 7.4, 7.6) மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இலங்கை அணி 35 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டதோடு, 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-0 என வெற்றி கொண்டுள்ளது.

போட்டியின் நாயகனாக பானுக ராஜபக்‌ஷ தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது ரி20 போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றி பெற்று, தர வரிசையில் உலகின் முதலாவது இடத்திலிருக்கும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம், ஆறு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தியிருந்த நிலையில், நேற்றைய போட்டியையும் வெற்றி கொண்டு தொடரையும் வெற்றி பெற்று, பாகிஸ்தான் அணியுடனான தொடரை 2-0 என, முதன் முறை கைப்பற்றி வரலாற்றுப் பதிவையும் மேற்கொண்டுள்ளது.

இவை யாவையும் அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியினால் மேற்கொள்ள முடிந்துள்ளமையானது, கிரிக்கெட் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்திற்கும் பாராட்டுக்கும் உரியதாக அமைத்துள்ளது.

இத்தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் (09) லாஹூரில் இடம்பெறவுள்ளது.

இலங்கை 182/6 (20.0)
பானுக ராஜபக்‌ஷ 77 (48)
ஷெஹான் ஜயசூரிய 34 (28)
தசுன் ஷானக 27 (15)

இமாத் வசீம் 1/27 (4.0)
வஹாப் றியாஸ் 1/31 (4.0)
ஷாதாப் கான் 1/38 (4.0)

பாகிஸ்தான் 147/10 (19.0)
இமாத் வசீம் 47 (29)
ஆசிப் அலி 29 (27)
சர்பராஸ் அஹமட் 26 (16)

நுவன் பிரதீப் 4/25 (4.0)
வணிந்து ஹசரங்க 3/38 (4.0)
இசுரு உதான 2/38 (4.0)

ஆட்டநாயகன்: பானுக ராஜபக்‌ஷ


Add new comment

Or log in with...