சுற்றுலாத்துறையிலுள்ள சாரதிகளுக்கு முறையான 4 நாள் பயிற்சி | தினகரன்


சுற்றுலாத்துறையிலுள்ள சாரதிகளுக்கு முறையான 4 நாள் பயிற்சி

சுற்றுலாத்துறையிலுள்ள சாரதிகளுக்கு முறையான 4 நாள் பயிற்சி-SLTDA and National Tourist Drivers Association hold 4-day capacity Building Training for National Tourist Drivers for the 34th time

  • 34ஆவது முறையாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கம் ஏற்பாடு
  • பயிற்சியின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், அடையாள அட்டை
  • சுற்றுலாத் துறையிலுள்ள சாரதிகளை விண்ணப்பிக்குமாறு அழைப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கம் (NTDA) இணைந்து இலங்கையிலுள்ள சுற்றுலா சாரதிகளுக்கான 4 நாள்  திறன் விருத்தி பயிற்சியை நடாத்தியுள்ளது.

34ஆவது முறையாக இடம்பெறும் இப்பயிற்சிகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா என்பது இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக மாறியுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறைக்கான சுற்றுலா சாரதிகளுக்கான மனிதவள தேவை அதிகளவில் நிலவுகின்றது. சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வரும் வேளையில், சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான சேவை வழங்கும் பொருட்டு, பயிற்சி பெற்ற சுற்றுலா வசதியாளர்களை, குறிப்பாக சுற்றுலா சாரதிகளுக்கான தேவையை பூர்த்தி செய்வது இத்துறையில் அதிக கேள்வியாக காணப்படுகின்றது.

சுமார் 5,500 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இலங்கையின் தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கமானது, முறைசாரா ரீதியில் சுற்றுலாத் துறையிலுள்ள சாரதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ‘Academy of Tourism Studies’(அகடமி ஒப் டூரிஸம் ஸ்டடீஸ்) என்ற பெயரில் அதன் பயிற்சிப் பிரிவை அமைத்துள்ளது. இது தொடர்பில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் சுற்றுலா சாரதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக, 34 பயிற்சித் திட்டங்களை அவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இதன் இறுதிப் பயிற்சி கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டையிலுள்ள முன்னாள் படைவீரர் சங்கத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கம், சுற்றுலா சாரதிகளை திறன் மற்றும் முகாமைத்துவ திறன்களைக் கொண்டவர்களாக வலுப்படுத்துவதோடு, அதன் மூலம் சுற்றுலாத் துறையில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள சாரதிகளுக்குத் தேவையான தத்துவார்த்த அறிவு மற்றும் செயன்முறை வெளிப்பாடுகளை வழங்குவதுமாகும்.

அது மாத்திரமன்றி, முறைசாரா ரீதியிலான சுற்றுலா சாரதிகளுக்கு, அவர்களின் பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் மூலம் சுற்றுலாத் துறையின் பிரதான பங்கு வகிக்கும் வகையிலான அங்கீகாரத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

நான்கு நாள் பயிற்சித் திட்டத்தில் இலங்கையில் சுற்றுலா மற்றும் அதன் நிகழ்கால போக்குகள், சவால்கள், நாட்டில் சுற்றுலாவின் வாய்ப்புகள் மற்றும் தாக்கம், வாடிக்கையாளர் தொடர்பு, வாடிக்கையாளர் நலன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி, சுற்றுலா சாரதிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள், சுற்றுலா சாரதிகளுக்கு அத்தியாவசியமான முதலுதவி பயிற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொருவரினதும் தகுதியை மதிப்பிடும் வகையில், விரிவுரைகளின் அடிப்படையிலான எழுத்துமூல பரீட்சை நடத்தப்பட்டு 45 எனும் குறைந்தபட்ச தேர்ச்சி புள்ளி நிர்ணயம் செய்யப்பட்டது. எழுத்து மூல பரீட்சையில் தேர்ச்சியடைந்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா சாரதி அடையாள அட்டையைப் பெற தகுதியுடையவர்களாகின்றனர்.

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து சாரதிகளுக்கும் இந்த பயிற்சியில் பங்குபெறுமாறு, தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை திறந்த அழைப்பை விடுப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற www.touristdrivers.com எனும் இணையத்தளத்தை அணுகுமாறு சபை கேட்டுக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...