உலக விண்வெளி வாரம்; ஒக். 04 - 10 | தினகரன்


உலக விண்வெளி வாரம்; ஒக். 04 - 10

உலக விண்வெளி வாரம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படுகிறது. 1957 ஒக்டோபர் 4 அன்று முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் உலகைச் சுற்றி வந்தது. 1967 ஒக்டோபர் 10 அன்று புவிக்கு அப்பால் புற விண்வெளி உடன்படிக்கை உருவானது. அதன்படி சந்திரன், செவ்வாய் போன்ற புற விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.

உலகம் முழுவதும் 1982-இல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 4, 10 ஆகிய இரண்டு நாட்களின் இடையே விண்வெளி வார விழா நடைபெற்று வருகிறது. விண்வெளி அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைறகளில் கையாள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும், குடிமக்களுக்கும் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை அதிகரிப்பதே ஐ.நாவின் நோக்கம். இந்த ஆண்டு ஐ.நாவின் உலக விண்வெளி வார அமைப்பு அறிவித்துள்ள முத்திரை மொழி, ‘சந்திரன் நட்சத்திரங்களுக்கு ஒரு நுழைவாயில்' என்பதே ஆகும். அந்த வகையில், 2018 டிசம்பர் 7 அன்று செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கே 4 விண்கலம் 2019 ஜனவரி 3 அன்று முதன்முறையாக சந்திரனின் மறுபக்கத்தில் சென்று இறங்கியது.

கடந்த ஜூலை 22-ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலம் 3,84,000 கி.மீ.தொலைவுக்குச் சென்று வெறும் 2 கிலோமீட்டர் அருகில் சென்ற பின்னர் அதன் தகவல் தொடர்பு துண்டிப்புக்குள்ளானது. எனினும், சந்திரயான் 2 சுற்றுகலன் அடுத்த 7 ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்படும். நிலவு பற்றிய புதிய தகவல்களைச் சேகரிக்கும்.

அறிவியலிலேயே உலகம் இயங்குகின்றது.புதிய கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்காக அமையட்டும்.அதுவே நன்மை பயக்கும்.  


Add new comment

Or log in with...