நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்பில் மாரடைப்பால் மரணம் | தினகரன்


நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்பில் மாரடைப்பால் மரணம்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, விளம்பர தயாரிப்பு உதவி முகாமையாளராக சினிமாவில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறிய சிறிய வேடங்களில் நடித்து பின் முக்கிய நகைச்சுவை நடிகராக அசத்தினார்.

நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் நடிப்பதற்காக 1983 ஆம் ஆண்டு சென்னை வந்தார். பின்னர் தயாரிப்பு முகாமையாளராக வாய்ப்பு கிடைத்தது. பல படங்களுக்கு தயாரிப்பு முகாமையாளராக பணியாற்றினார். கூடவே, சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார். எல்லாம் அவன் செயல், நான் கடவுள் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். தவசி படத்தில் எஸ்க்யூஸ்மி, இவர் அட்ரஸ் தெரியுமா? என்று வடிவேலுவிடம் பின்லேடன் முகவரி கேட்பவராக நடித்திருப்பார். எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவை அரிவாளால் மிரட்டுபவராகவும் நடித்திருப்பார். இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது. கேரளாவின் குமுளி அருகே நடந்த படப்பிடிப்பு தளத்தில் அவருக்குத் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு படக்குழுவினர் கொண்டுசென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிர்பிரிந்தது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...