Saturday, April 20, 2024
Home » காசா எல்லை நகரான ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு

காசா எல்லை நகரான ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு

- “பேரழிவு” பற்றி அமெரிக்காவும் எச்சரிக்கை

by manjula
February 10, 2024 7:14 am 0 comment

தெற்கு காசாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பியுள்ள எல்லை நகரான ரபா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நருக்கு படைகளை அனுப்ப இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் இந்தத் திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் இன்னும் நுழையாத கடைசி பிரதான நகராக இருக்கும் ரபாவுக்குள் நுழைவதற்கு தயாராகும்படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரபாவில் இஸ்ரேலிய படை நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது என்று அந்நாட்டு இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர், “மிகக் கடுமையாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ரபா நகரில் இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை தாக்குதல்களை நடத்திய நிலையில் நேற்று அது தீவிரம் அடைந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரபாவில் உள்ள குடியிருப்பு வீடுகள் மீது இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய தாக்குதல்களில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

இதில் அல் செய்யித் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் மற்றும் அல் நஹ்ஹால் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

ரபாவில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“எமது வீட்டுக்கு அருகில் பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டது. வீதியில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதை நாம் கண்டோம்” என்று ரபாவில் உள்ள 60 வயதான ஜாபிர் அல் பர்தினி என்பவர் குறிப்பிட்டுள்ளார். “ரபாவில் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. அவர்கள் ரபாவுக்குள் நுழைந்தால் நாம் எமது வீடுகளிலேயே மரணிப்போம். எமக்கு வேறு வழியில்லை. நாம் வேறு எங்கு செல்லவும் விரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். ரபா தவிர தெற்கின் பிரதான நகரான கான் யூனிஸ் மற்றும் வேறு இடங்களிலும் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் நீடித்தன. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு வெளியில் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளால் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மருத்துவ பணியாளர்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 13 படுகொலை சம்பங்களில் காசாவில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டு மேலும் 142 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கி 27,947 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 67,400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் இடிபாடுகளில் புதையுண்டு கொல்லப்பட்டதாக அஞ்சப்படும் சுமார் 7,000 பேர் காணாமல்போயுள்ளனர்.

ரபாவில் இஸ்ரேலின் தரைவழி படை நடவடிக்கைக்கான தீவிர திட்டமிடல் ஒன்றுக்கான எந்த ஆதாரத்தையும் இன்னும் காணவில்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் வெடன்ட் படேல் தெரிவித்துள்ளார்.

எகிப்து எல்லையை ஒட்டிய நகராக இருக்கும் ரபா, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வருவதற்கான தீர்க்கமான வாயிலாகவும் உள்ளது. இவ்வாறான இடத்தின் மீதான தாக்குதலுக்கு நாம் ஆதரவளிக்க மாட்டோம் என்று படேல் கூறினார்.

“எந்த ஒரு திட்டமிடல் இன்றி, சிறிதும் யோசிக்காமல் இப்போதே இப்படி ஒரு போர் நடவடிக்கையை மேற்கொள்வது பேரழிவாக இருக்கும்” என்றார் படேல்.

ரபா நகரில் தற்போது காசாவின் 2.4 மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. எகிப்தில் புதிய சுற்று பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு கட்டாருடன் ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை கடினமானதாக இருக்கும் என்று காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருப்பதோடு ஹமாஸுக்கு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது முக்கியமானதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரின் தாக்கம் பிராந்தியம் எங்கும் பரவியுள்ள நிலையில் லெபனான் போராட்டக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று வடக்கு காசா மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனானின் நபாதியாவில் நேற்று முன்தினம் (08) இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் காயமடைந்ததை அடுத்தே இந்த பரஸ்பர தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மறுபுறம் செங்கடலில் உள்ள கப்பல்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த யெமன் ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தயாராக வைத்திருந்த நான்கு ஏவுகணைகள் மற்றும் ஏழு கப்பல் எதிர்ப்பு குரூஸ் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT