பாகிஸ்தானை ஆறு ஆண்டுகளுக்குப் பின் ரி20இல் வீழ்த்திய இலங்கை இளம் அணி | தினகரன்


பாகிஸ்தானை ஆறு ஆண்டுகளுக்குப் பின் ரி20இல் வீழ்த்திய இலங்கை இளம் அணி

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளம் அணி உலகின் முதல்நிலை ரி20 அணியான பாகிஸ்தானை முதல் ரி20 போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் இலங்கை 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் இளம் வீரர் மொஹமட் ஹஸ்னைன் ஹட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியபோதும் தனுஷ்க குணதிலக்க ரி20இல் தனது அதிகூடிய ஓட்டங்களாக 57 ஓட்டங்களை பெற முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

லாஹோரிக் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் பதிலெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கே சுருண்டது. இசுரு உதான மற்றும் நுவன் பிரதீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அனுபவம் அற்ற வீரர்களைக் கொண்ட ரி20 தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு இந்த வெற்றி முக்கியமானதாகும். இலங்கை ரி20 அணித்தலைவர் லசித் மாலிங்க உட்பட் முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்த நிலையிலேயே இளம் வீரர்கள் இந்த சுற்றுப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குனத்திலக்க எட்டு பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 57 ஓட்டங்களை பெற்றதோடு அவர் அவிஷ்க பெர்னாண்டோவுடன் சேர்ந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். பெர்னாண்டோ 34 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் 19 வயதான இளம் வீரர் மொஹமட் ஹஸ்னைன் ஹட்ரிக் விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார். 16 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அவர், பானுக ராஜபக்ஷவின் விக்கெட்டினை வீழ்த்தியதுடன், 19 ஆவது ஒவரின் முதல் இரண்டு பந்துகளில் தசுன் ஷானக்க மற்றும் ஷெஹான் ஜயசூரியவின் விக்கெட்டினை அடுத்தடுத்து வீழ்த்தி ரி20 போட்டிகளில் ஹட்ரிக் விக்கெட்டினை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதேவேளை, 2013 ஆம் ஆண்டு துபாயில் இடம்பெற்ற போட்டியில் 24 ஓட்ட வெற்றிக்கு பின்னர், இலங்கை அணி பாகிஸ்தான் அணியை ரி20 போட்டியொன்றில் வீழ்த்தும் முதல் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. அத்துடன், 64 ஓட்டங்கள் என்ற அதிகூடிய ஓட்டங்கள் வீழ்த்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாதித்துள்ளது.

அதற்கு முன்னர், 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியமையே இலங்கை அணியின் அதிகூடிய ஓட்ட வித்தியாச வெற்றியாக இருந்தது. அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்ட இரண்டாவது குறைந்த ரி20 ஓட்ட எண்ணிக்கையாகவும் இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரில் 1–0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி இன்று லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...