அருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம் | தினகரன்


அருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம்

நவீன இலத்திரனியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பினால் வந்துள்ள ஆபத்து!

வாசிப்புப் பழக்கம் இல்லாத மாணவர் கல்வியில் பின்தங்குவர் என்பது உறுதி

தேசிய வாசிப்பு மாதம்

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டு முதல் ஒக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு தொனிப் பொருளுடன் வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் 2019ம் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாதத்திற்கான தொனிப்பொருள் 'வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்'என்பதாகும்.வாசிப்புப் பழக்கத்தை சிறுவர்கள் உட்பட அனைவர் மத்தியிலும் ஊக்குவிப்பதற்கு விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மொழியில் வாசிப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது.மொழியின் ஆரம்பம் சைகையாகும்.பின்பு எழுத்துருவம் பெற்ற காலத்தில் வாசிப்பு முக்கியத்துவம் பெறலாயிற்று. பாடசாலைக் கலைத் திட்டத்தில் மொழித்திறன்களை அதிகரிப்பதற்குரிய வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை நோக்கும் போது முதலாவது தொடர்பாடல் தேர்ச்சிகளாக எழுத்தறிவு,எண்ணறிவு,சித்திரஅறிவு, தேர்ச்சிகள் வகுக்கப்பட்டுள்ளன.இதில் கவனமாக செவிமடுத்தல்,தெளிவாகப் பேசுதல்,கருத்தறிய வாசித்தல்,சரியாகவும்,செம்மையாகவும் எழுதுதல்,பயன் தரும் கருத்துப் பரிமாற்றம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்பக் கல்விப் புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.மௌனமாக வாசித்தல்,உரத்து வாசித்தல் என்னும் சொற்கள் கற்றல், கற்பித்தலில் மொழிப்பாடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன .

கேட்டல்,பேச்சு,வாசிப்பு,எழுத்து என்பன மொழியின் அடிப்படைத் திறன்களாகும்.இவற்றில் கேட்டல்,பேச்சு என்பவற்றை பிள்ளையானது பாடசாலைக்கு வருவதற்கு முன்னே கற்றுக் கொள்கின்றது.வாசிப்பு, எழுத்து இரண்டையும் பிள்ளை பாடசாலையில் கற்றுக் கொள்கின்றது. தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக வாசித்தல்,பொழுதுபோக்கிற்காக வாசித்தல் என்றபடி ஒருவரின் நாளாந்த வாழ்க்கையில் வாசிப்பின் பயன் முக்கியத்துவம் பெறுகிறது.

வாசிப்பானது கற்கின்ற ஒரு வழிமுறை.வாசிப்பின் மூலம் ஒருவன் (மாணவன்) கற்றுக் கொள்கின்றான்.அறிவைப் பெற்றுக் கொள்கின்றான். அவனது விளக்கம் விருத்தியடைகிறது. இவ்விருத்தியானது பிள்ளையின் புத்திசார் விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.நூல்கள் மூலம் காலம், நேரம் மற்றும் ஏனையோரில் தங்கியிருப்பதிலிருந்து மாணவன் விடுதலை பெறுகின்றான். பாடசாலையிலோ அல்லது வெளியிலோ அவன் விரும்பும் போது தானாகவே கற்று முன்னேறிச் செல்வதற்கான இயலுமையை வாசிப்பானது அவனுக்கு பெற்றுக் கொடுக்கின்றது.

வாசிப்பானது புதிய அறிவைப் பெற்று அனுபவத்தை விரிவாக்கிக் கொள்ள உதவுகிறது. மற்​ைறய சமயத்தவர்களின் கலாசார விழுமியங்களை அறிந்து இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைப் பெறுவதற்கும்,இனஒற்றுமையுடன் வாழ்வதற்கும் வாசிப்பு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

மேலும் எழுத்துத் திறனைப் பெறுவதற்கு வாசிப்புத் திறன் அவசியம். பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு பிள்ளை எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத்திறனை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும்.ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

பாடங்களை கற்க முடியாமை,பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை,கல்வியில் பின்தங்குதல், மனவெழுச்சிப் பிரச்சினைககள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும் .இதனால் பாடசாலையிலிருந்து பிள்ளை இடைவிலகக் கூடிய வாய்ப்பும் ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு.

எழுத்துகளை காணும் நிலையே வாசித்தலின் ஆராம்பமாகும்.கண்ணால் காணுவதை மூளையானது அறிந்து பொருள் உணருகின்றது.இதன் போது அங்கே வாசித்தல் நிகழ்கின்றது. இங்கு இரண்டு உளவியற் செயல்கள் நடை பெறுகின்றன.மூளை கண்ணுக்குச் செல்லுதல்,கண் மூளைக்குச் செல்லுதல் என்பன நடைபெறுகின்றன.அதாவது வரிவடிவத்திலுள்ள சொற்ளை ஒலிவடிவமாக மாற்றி உச்சரித்தல், உறுப்புகளும் சொற்களை நோக்குகின்ற கண்ணும் ஒத்துழைத்தல்.அவ்வாறு ஒத்துழைக்கின்ற போது தான் அங்கே வாசித்தல் நடைபெறுகின்றது.

வாசிப்பு ஒரு பிள்ளையில் சிறுபராயத்திலிருந்து உருவாக வேண்டும்.இன்றய நவீன உலகில் வாசிப்புத்திறன் அருகி வருகின்றது. இதனால் பொதுஅறிவுத்திறன் மாணவர்(மக்கள்) மத்தியில் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகிறது.இது பிள்ளையின் வாசிப்புத்திறனில் ஏற்பட்டுள்ள பின்னடைவைக் காட்டுகின்றது.

'ஸ்மாட் போன்' பாவனை,கனனித் தொடர்புகள்,தொலைக்காட்சி நிழ்ச்சிகள்,வானொலி போன்ற ஊடகங்களின் செயற்பாடுகளின் காரணமாக இன்று நூல்ளையும் பத்திரிகைகளையும் வாசிப்பதை அதிகமானோர் தவிர்த்து வருகின்றனர் .இந்த இலத்திரனியல் சாதனங்கள் வாசிப்புக்கு போட்டியாக இருக்கின்றன.மேலும் முகநூல்களில் செய்திகளை,தகவல்களை பதிவிடும் அதிகமானோர் தமிழ் இலக்கணப் பிழைகளுடனும் எழுத்துப் பிழைகளுடனும் எழுதுகின்றனர்.இதற்குக் காரணம் வாசிப்பு பற்றிய போதிய தெளிவின்மையும் மொழியறிவு பற்றிய தகல் பற்றாக்குறையுமாகும். இதைத் தவிர்ப்பதற்கு வாசிக் கவேண்டும். வாசிக்க வாசிக்க அறிவு கூர்மையடைகிறது.

வாசிக்கும் சமூகத்தை சிறுவர்களிடம் உருவாக்குவதற்கு பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கவிதை,பாடல்,கதைகேட்டு வாசித்தல்,பிழையின்றி உச்சரித்து வாசித்தல் போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.சுயசரிதை, கற்பனைக் கட்டுரை, வருணனைக் கட்டுரை விமர்சனக் கட்டுரை, சிறுகதை, உரையாடல் போன்றவற்றை ஆசிரியர் வாசித்துக் காட்டி மாணவரை ஊக்குவிக்க வேண்டும்.

வாசிப்பின் தவறான பழக்கங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

நிறுத்தக்குறிகளைக் கவனிக்காமை,வாசிக்கும் விடயத்தின் கருத்து மீது கவனம் செலுத்தாமை, சொற்களை கருத்தற்ற முறையில் வாசித்தல்,சொற்களை விடுதலும் சேர்த்தலும்,சொற்களை திரும்பத் திரும்ப வாசித்தல்,சொற்களின் கருத்துகளை விட்டு வாசித்தல்,முதலாம் எழுத்தைக் கண்டவுடன் பிழையாக வாசித்தல்,விபரங்களைத் தவற விடல் என்பன வாசிப்பின் தவறான பழக்கங்களாகும்.இந்தத் தவறான பழக்கங்களை திருத்தி சரியாக வாசிக்கப் பழக்க வேண்டும். வாசிக்கும் சமூகத்தினை உருவாக்கஆரம்பத்திலிருந்தே முயற்சிப்போம்.

 


Add new comment

Or log in with...