Friday, April 19, 2024
Home » ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்

ஜனாதிபதி ரணில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகள் குறித்தும் பேச்சு

by mahesh
February 10, 2024 6:40 am 0 comment

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 07ஆவது இந்து சமுத்திர மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிற்கும் (Penny Wong) இடையிலான சந்திப்பு நேற்று (09) முற்பகல் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கை ஜனாதிபதியை மரியாதையுடன் வரவேற்ற அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், இந்த மாநாட்டுக்கு இலங்கை வழங்கிய சிறப்பான ஆதரவையும் பாராட்டினார்.

இந்து சமுத்திரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அமைச்சர் விளக்கினார்.

இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (Indian Ocean Rim Association) செயற்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்து சமுத்திரத்தை நோக்கி அதிகாரத் தளங்கள் மாறுவதன் மூலம், பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்த ஜனாதிபதி, அத்துறையில் ஏற்கனவே பல அவுஸ்திரேலிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். “கொழும்பு முறைமை” வரையிலான இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து இங்கு நினைவுகூரப்பட்டதுடன், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல புதிய துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடினர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஷ்வர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே மற்றும் ரிஷான் டி சில்வா ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT