Saturday, April 20, 2024
Home » கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய சகா ‘சாமிக்க’ ரி 56 துப்பாக்கியுடன் கைது
பெலியத்த ஐவர் படுகொலை சம்பவம்

கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய சகா ‘சாமிக்க’ ரி 56 துப்பாக்கியுடன் கைது

by mahesh
February 10, 2024 6:28 am 0 comment

பெலியத்தவில் ஐந்து பேரை சுட்டுப் படுகொலை செய்தமைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 ரக துப்பாக்கியுடன், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கொஸ்கொட சுஜீ என்பவரின் நெருங்கிய உறவினரான “சாமிக்க” என்பவர் பெலியத்தவில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த துப்பாக்கியுடன், ஒரு மகசீன் மற்றும் 32 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் சாமிக என்ற புனைப்பெயர் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வாவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் பிரிவு (01) இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.பி.ஜே.நிஷாந்த உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். விசாரணையின் போது, ​​எஞ்சிய உபகரணங்கள் சந்தேக நபரின் வீட்டுக்கருகிலுள்ள கறுவா தோட்டமொன்றில் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கொஸ்கொட சுஜீ’ என்றழைக்கப்படும் ஜகமுனி சுஜீ த சொய்சா என்பவரே இந்தத் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் காலாட்படையில் இணைந்து 2009ஆம் ஆண்டு அதிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளாரா, அண்மைய கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் என்பனவற்றை கண்டறிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பெறப்படுமென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில், பிரிவு ஒன்றின் நிலைய பொறுப்பதிகாரி SPP நிஷாந்த உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT