மழைக் காலம் | தினகரன்


மழைக் காலம்

நாளை எப்படியும் மழை வரும் என்றான் புத்தன். அவன் எப்பொழுதுமே மழை பற்றி பேசுகிறான். நீண்ட காலமாய் வரட்சியாகி விட்டிருந்த நிலத்தின் மீது அவனால் எதனை எதிர்பார்க்க முடியும். பக்கத்துக் காட்டில் இருக்கின்ற அனைத்து போதி மரங்களையும் வெட்டிவிட்டார்கள். மழை மீதான எந்த எதிர்பார்ப்பினையும் கொண்டிராத சீட வியாபாரிகள். ஊரின் நதி வற்றியிருக்கிறது. மனிதர்கள் கற்றுக் கொண்ட மரங்கள் மீதான முழு வடிவமே அது. ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் புத்தன் மழையை வேண்டிச் செல்வான். மழை பலவற்றையும் கற்றுத் தரும். அவற்றிலிருந்து பல்லாயிரம் படிப்பினைகளை உலகெங்கும் பரப்பினான் புத்தன். போதி மரங்கள் எங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் இருந்திருந்தால் நாங்களே அதனை காப்பாற்றியிருப்போம். அவர்களோ வியாபாரத்திற்காய் போதி மரங்களை விற்கின்றனர். மழை போதி மரங்களை வளர்க்கவில்லை. அம்மாதிரியான மழைகளை நாங்கள் வேண்டுவதுமில்லை.|| என சீடர்கள் புலம்பித் திரிந்தனர். 

போதி மரங்களை வெட்டிய பாவத்தினால் சாம்ராஜ்ஜியங்கள் அழிவினை நோக்கி நகர்ந்தன. எல்லாக் குளங்களும் வற்றிப் போயின. சாம்ராஜ்ஜியத்தில் இருக்கின்ற பெண்கள், குழந்தைகள் தங்களது சாபத்தினை ஏவிவிட்டபடி இருந்தனர். புத்தனின் கண்களில் தவழுகின்ற கனவுகளின் பின்புலத்தில் பொதிந்திருக்கும் பல அதிர்ச்சிகரமான போதனைகள் இருக்கின்றன. போதி மரங்களுக்கு பின்னால் இருக்கின்ற வலியினையும், அதனை வெட்டுவதால் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும், சுமைகளையும் அவர்கள் அறியாதவர்களாயினர். வரலாற்று நிகழ்வுகளைப் பொறுத்தவரை மிக அவதானமாகவும், சீரிய கரிசனையுடனும் போதி மரங்களை கையாள முற்படுதல் மிகக் கட்டாயமானதாகிறது. அதன் மூலம் எடுக்கப்படுகின்ற இருப்புகள் இன்னுமொரு நூற்றாண்டினை நோக்கிய வரலாற்றின் அழிவினைப் பேச முனைகின்றன. 

பல்லாயிரம் முறை அந்த இடத்தில் போதி மரங்களை வெட்டியிருக்கிறார்கள். அவற்றால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களிடமிருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அது மிகவும் சிரமமான காரியம். அவர்களிடம் கூரிய ஆயுதங்கள் இருக்கின்றன. போதி மரங்கள் என்பவை காலத்தின் வீச்சினை நோக்கி நகரக்கூடியவையே. புத்தனிடம் போதி மரங்கள் முறைப்படத் தொடங்கின. மரங்களால் எப்படி முறைப்பட முடியும்? என அவர்கள் கேட்டனர். மரங்கள் உயிர்களில் மிக சிறப்பானவை என புத்தன் பதில் கூறினான். மரங்கள் அவனுடன் பேசத் துவங்கின. முனைப்பான செயலூக்கத்தில் செயற்படக்கூடிய மழையினை உருவாக்கும் வெளி மிக விசாலமானதாகும். போதி மரங்கள் எப்பொழுதும் விசாலமாக இருக்க வேண்டும் என மழைகள் விரும்புகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் பல உண்டு. சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் சக்தி போதி மரங்களிடம் இருக்கின்றன. மரங்களை வெட்ட அனுமதிக்கவே கூடாது என போதி மரங்கள் புத்தனிடம் புலம்பி அழுத கதையினை அவர்களுக்கு அவன் கூறினான்.  


Add new comment

Or log in with...