எழுத்தியக்க பெருவெளி | தினகரன்


எழுத்தியக்க பெருவெளி

பன்முக வாசிப்பினைக் கொண்ட ஒரு படைப்பாளியிடம் மட்டுமே பிரதி தருகின்ற இன்பத்தினை நுகர முடியும். பரந்துபட்ட சிந்தனைத் தளத்தின் ஊடாக எழுதப்படும் பிரதியாக்கங்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வரைபடத்தினை வைத்து இயங்குவதில்லை. மாறாக நிலமெங்கும் கவிதையாகவும், விமர்சனங்களாகவும். மொழிபெயர்ப்பாகவும், பரப்பிவிடப்பட்டிருப்பதினை நாம் அவதானிக்க முடியும். ஒரு பிரதியினை மையப்படுத்துகின்ற அரசியலில் இருந்து அதனைப் புரிந்து கொள்கின்ற வாசகனானவன் இடர்பாடுகள் இல்லாத வழி முறையினை மட்டுமே சந்திக்க முனைகிறான். அவ்வாறான பிரதிகளில் இருந்து வெளிப்படுகின்ற ஏராளமான வார்த்தைக் குவியல்கள் பிரதியினை மட்டுமல்லாமல் பிரதியாளனையும் சேர்த்து மதிப்பிடுகின்ற நிலையினை அடைந்திருக்கிறது.  

இதன் தொடர்ச்சியாக ஈழத்து ஆளுமைகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் பன் முகங்களின் பக்கம் தன்னை செலுத்திக் கொண்ட காத்திரமான படைப்பாளி. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என இலக்கியப் பரப்பின் சீரியசான இருப்பியலினை தனது படைப்புக்கள் மூலம் நிலையாக்கிக் கொண்டவர்.

மழை நாட்கள் வரும், அழியா நிழல்கள், தாத்தாமாரும் பேரர்களும், பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் போன்ற கவிதைத் தொகுப்புக்களையும். மொழியும் இலக்கியமும், மொழியியலும் இலக்கியத் திறனாய்வும், மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும், திறனாய்வுக் கட்டுரைகள், பாரதியின் மொழிச் சிந்தனைகள், இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், அடிப்படைத் தமிழ் இலக்கணம் போன்ற விமர்சனத் தொகுப்புக்களையும், பலஸ்தீனக் கவிதைகள், மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள், காற்றில் மிதக்கும் சொற்கள் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும். கடப்பாடு அல்லது சுயாதீனம், இஸ்லாமியப் பெண்கள் பற்றிய சட்டப் பிரச்சினைகள், இன முரண்பாடு வரலாற்றியல், முஸ்லிம் பெண்களும் அரசியலும் போன்ற மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும். தொகுப்பாசிரியராக இருந்து மஹாகவி கவிதைகள், மஹாகவியின் வீடும் வெளியும், மஹாகவியின் கோடை போன்ற மிகக் காத்திரமான படைப்புக்களை தமிழ்ச் சூழலிற்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் ஈழத்து இலக்கியப் போக்கின் தவிர்க்க முடியாத படைப்பாளியாவார்... 

தமிழ் இலக்கியச் சூழலில் பிரதிகள் மீதான விமர்சன முறையினை மிக நுட்பமாகக் கையாண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் புது விதமான எழுத்தியல் அமைப்பினை தனக்கான போக்காக வகுத்துக் கொண்டவர். மார்க்சிய கருத்தியல்புகளை பல் வேறுபட்ட பார்வைகளில் விரிவாக்கிக் கொண்ட இவரது படைப்புக்களானது, தொடரான விமர்சன முறைக்கு காத்திரமான செல்வாக்கினைச் செலுத்தின.

திறானாய்வுகளினது தனித்துவ முறைமைகளை இவரைத் தவிர ஆழ்ந்து கவனித்து எழுத்துருவாக்கம் செய்தவர்கள் மிக சொற்பமானவர்களே. ஒரு படைப்பாளனிடம் தங்கியிருக்க வேண்டிய பன்முக வாசிப்பினுடனான எழுத்து உற்பத்தி இவரிடம் நிறைந்து காணப்பட்டதினை அவரது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. 2011ம் ஆண்டு பன்முக செயற்பாட்டிற்காக விளக்கு விருதினைப் பெற்றுக் கொண்டு இவர் ஆற்றிய உரை விருதுகள் மீதான ஒரு புதிய பார்வையினைத் தோற்றுவித்தது. கல்விமுறையிலும், படைப்பாளியாகவும் தன்னை செதுக்கிக் கொண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுத்துக்களின் புரிதல்களை உணர்த்திய ​பெரும் படைப்பாளி.  

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் 


Add new comment

Or log in with...