சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைகிறதா? | தினகரன்


சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைகிறதா?

மகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் விளைவாக கர்ப்பிணியின் உடல் எடையும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையும் அளவுக்கு மீறி அதிகரிக்க முடியும். அதன் விளைவாக சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடலாம். அதன் காரணத்தினால் அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு, தேவைக்கேற்ப ஆரோக்கியமான உணவு வகைகளை மாத்திரமே சாப்பிட வேண்டும்.  

பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக மூன்று, நான்கு கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம். கருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர போஷாக்கான உணவு வகைகள் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக்கலாம்.  

சில கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக அவர்களது வாழ்க்கை முறையும் காரணமாகும். என்றாலும் கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுக்க வேண்டியதில்லை. சிறுசிறு வேலைகளில் தாராளமாக ஈடுபடலாம்.

மருத்துவரின் ஆலோசனையுடன் எளிய நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்.  

கர்ப்ப காலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது.

மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவ காலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.  

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம்.

அத்தோடு அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சை தான் வழி என்று சொன்னால் அவரது ஆலொசனைப்படி செயற்படுவதே சிறந்ததாகும்.   


Add new comment

Or log in with...