The Postman: நட்பின் கவித்துவ சினிமா | தினகரன்


The Postman: நட்பின் கவித்துவ சினிமா

மக்கள் சினிமாவினை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமல்லாமல் தங்களது வரலாற்றினை காட்சிப்படுத்துகின்ற ஆவணமாகப் பார்த்தார்கள். பிற்பட்ட காலங்களின் சினிமாப் போக்கானது யதார்த்தங்களை மீறிய மசாலக் கலவைக்குல் தன்னை உட்படுத்திக் கொண்டது. இதிலிருந்து சினிமா பற்றிய துரதிஷ்டமான புரிதல்கள் சமூகத்தில் ஊடுருவின.

சினிமா என்பது மனிதனின் செயற்பாட்டிற்கு தடையாக இருக்கின்ற ஒரு பொழுதுபோக்கு அமைப்பாக விமர்சிக்கப்பட்டது. இவ்வாறான சூழ் நிலைகள் சினிமா உலகில் தொடர்ச்சியாக இடம்பெற்றாலும் மனித யதார்த்த வாழ்வினை விவரணப்படுத்துகின்ற படைப்புக்களும் வெளிவரத் தயங்கவில்லை. புதிய தொழில் நுட்பத்தினுடைய கண்டு பிடிப்புக்கள், வரலாறுகளைச் சொல்லுவதற்கு அவை ஆற்றிய மிகப் பெரும் பங்குகள் என்பன சினிமாவினை உலக தரத்திற்கு இட்டுச் சென்றன.

அன்றிலிருந்து இன்று வரை சினிமாவானது குறித்த ஒரு வரைவிலக்கணத்திற்கு உள்ளாக மாத்திரம் அளவிடப்படாமல் பல் வேறுபட்ட கோணங்களில் தன்னுடைய வளர்ச்சியினை நிரூபித்திருப்பதை நாம் அவதானிக்கலாம்... 

அவ்வகையில் இத்தாலி இயக்குனரான மிக்கேல் கர்ட்ஸினால் 1994ம் ஆண்டு இயக்கப்பட்ட ஒரு நட்பியல் திரைப்படம்தான் The Postman உலகப் புகழ் பெற்ற சிலி நாட்டுக் கவிஞரான பாப்லோ நெரூடாவிற்கும் ஒரு தபால் காரனுக்குமிடையே ஏற்படுகின்ற நட்பினை மிக தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

நோபல் பரிசு பெற்ற பாப்லோ நெரூடா இத்தாலியில் மறைந்து வாழ்ந்த காலப்பகுதியில் அவருக்கும் தபால் காரன் ஒருவனுக்கும் கடிதம் வழியாக நட்புத் தொடர்கிறது. நெரூடாவின் கவிதைகளில் லயித்துப் போன அந்த தபால் காரன் நெரூடாவின் வழிகாட்டலுடன் பெறும் கவிஞனாகிறான். பிறகு ஏற்படும் ஒரு விபத்தில் தபால் காரனான மரியோ இறந்து போக அவனுடைய நினைவுகள் நெரூடாவின் இயல்பு நிலையினை வெகுவாகப் பாதிக்கிறது. மனித உணர்வின் வெளிப்பாடாகவும், நட்பின் அடையாளமாகவும் பிரகடனப்படுத்தப்பட்ட இத்திரைப்படம் சிறந்த அயல்மொழிப் படைப்புக்கான ஒஸ்கார் விருதினை தன்வசமாக்கிக் கொண்ட சினிமாவாகும். இத்திரைப்படத்தில் மிக அற்புதமான உரையாடல்கள் நெரூடாவிற்கும், தபால் காரனுக்குமிடையே ஏற்படுகின்றன. அவ்வுரையாடல்கள் சினிமா அழகியலின் காத்திரமான கவர்ச்சித் தன்மையால் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஒரு சினிமா கொண்டிருக்க வேண்டிய உரையாடல் நுட்பத்தினை மிக நுணுக்கமாக கையாண்ட திரைப்படங்களுள் The Postman முதன்மையானதாகும். 

நெரூடாவின் கவிதைகள், தபால் காரனான மரியோவின் காதல், கவிதையும், காதலும் சேர்ந்து உருவாக்கிய நட்பு, அந்த நட்பின் மீதான காதல், நட்பு முறிந்த பின் அதன் தீராத வலி போன்றவற்றினை கவிதை அழகியலுடன் இத்திரைப்படம் கையாண்டிருப்பது பார்வையாளர்களை மிகவும் வசீகரித்திருந்தது. இவ்வுலகில் கவிதைகள் கொண்டிருக்கும் பெரும் தாக்கத்தினையும், நட்பின் இழப்பானது வெளிப்படுத்தும் விரக்தியினையும் சினிமா மொழியில் காட்சிப்படுத்திய The Postman ஒரு கவிதைச் சினிமாவாகும். 

 


Add new comment

Or log in with...