Home » 7ஆவது இந்து சமுத்திர மாநாடு: பாதுகாப்பான, வளமான இந்து சமுத்திரத்திற்காக ஒன்றிணைவோம்

7ஆவது இந்து சமுத்திர மாநாடு: பாதுகாப்பான, வளமான இந்து சமுத்திரத்திற்காக ஒன்றிணைவோம்

- முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க விரிவான திட்டம் அவசியம்

by Rizwan Segu Mohideen
February 9, 2024 8:34 pm 0 comment

– கப்பல் போக்குவரத்து சுதந்திரம் குறித்து கவனம் வேண்டும்
– 5 வருடங்களுக்குள் சுதந்திர பலஸ்தீன் அரசு ஸ்தாபிக்க வேண்டும்

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று (09) ஆரம்பமான நிலையில் நாளையும் (10)நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பலஸ்தீன் அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் (Premier) ரோஜர் குக் உடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT