உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் கிடையாது | தினகரன்

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் கிடையாது

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் கிடையாது-No President Election Before the Date-President at Nivithigala

 

  • இரத்தினபுரி மக்களுக்கு நீர்நிலைகளில் இரத்தினக்கல் அகழ அனுமதி
  • சு.க இன்றி எவரும் ஆட்சி அமைக்க முடியாது
  • பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்க ஐ.நாவில் விசேட பிரகடனம்

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது எனவும் அவ்வாறு நடத்துவதாயின் அதுபற்றிய தீர்மானமொன்றை தனக்கு மட்டுமே மேற்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (08) முற்பகல் நிவித்திகல சந்தை வளாகத்தில் இடம்பெற்ற நிவித்திகல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் கிடையாது-No President Election Before the Date-President at Nivithigala

ஜனாதிபதி தேர்தல் பற்றி இன்று நாட்டில் தேவையற்ற பரபரப்பொன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பெற்றுத் தருவதாக சிலர் தெரிவித்து வருகின்றபோதும், உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தான் ஒருபோதும் தயாராக இல்லையென்றும் அவ்வாறு நடத்துவதாயின் அது பற்றிய தீர்மானமொன்றை தனக்கு மட்டுமே மேற்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் ரீதியாக மிகை மதிப்பீட்டை கொண்டிருந்தால் அது தவறு விடும் இடமாகும் என்று தெரிவித்த ஜனாபதி, தம்மைப்பற்றி தாமே எந்த மதிப்பீட்டை கொண்டிருந்தபோதும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி தனித்து அரசாங்கத்தை உருவாக்க எவருக்கும் முடியாது என்பதை நினைவில்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் கிடையாது-No President Election Before the Date-President at Nivithigala

தனி மனிதர்களை சுற்றி கட்டியெழுப்பப்படும் அரசியல் இயக்கம் தற்காலிகமானது என்றும் நாட்டுக்குத் தேவையாக இருப்பது கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாகும் என்றும் குறிப்பிட்டார். தாய் நாட்டைப் பற்றி உரிய கொள்கையும் தொலை நோக்குமுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவன பலத்தை அதிகரித்து இன்று வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கேற்ப அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமென்றும் நாட்டின் முதன்மை பதவியாக பிரதமர் பதவியே இருக்கும் என்றும் அந்த வகையில் அரசியல் துறையில் அனைவரினதும் கலந்துரையாடலுக்கு உள்ளாக வேண்டியது அடுத்து வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பற்றியதாக அன்றி நாட்டுக்கு சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்வது பற்றியதாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றி எத்தகைய விமர்சனங்களை முன் வைத்தபோதும், அரசியல் ரீதியாக எதிர் தரப்பினர் எத்தகைய தாக்குதல்களை தொடுத்த போதும் எவருமே செய்யாத பணிகளை தான் நாட்டுக்காக செய்திருப்பதாக தெரிவித்தார்.

உலகில் எந்தவொரு தலைவரும் செய்யாத வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்குரிய எல்லையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கி நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தி சமுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடிய பின்புலத்தை தான் உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்காவின் கொள்கையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிக் கொள்கையும் அதுவேயாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாட்டுக்கு அந்த கொள்கையே என்றைக்கும் பொருத்தமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக முன் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகும் என்றபோதிலும், அவ்வாறு செய்தது கடந்த அரசாங்கத்தினால் செய்ய முடியாது போன விடயங்களை செய்வதற்கேயாகுமென்றும், நாடு இழந்திருந்த சர்வதேச ஒத்துழைப்பை மீண்டும் வெற்றிபெற்று இன்று நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவில் சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடிந்திருப்பதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

இம்மாதம் 24 ஆம் திகதி தான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளதாக தெரிவித்த அவர், பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய பிரகடனம் ஒன்றை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள பல்வேறு சவால்கள் அதன்மூலம் தீர்க்கப்படுமென்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மக்களுக்கு இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதி
இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் முகங்கொடுத்துள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கி அம்மக்களுக்கு பிரதேசத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்களில் கூடைகளை பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வதற்கு இந்த வாரம் முதல் அனுமதி வழங்க பொலிஸார் உட்பட உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 10 சிரேஷ்ட உறுப்பினர்களை பாராட்டி ஜனாதிபதியினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, விஜித் விஜயமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, நிவித்திகல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் மியுறு பாசித்த லியனகே, ஜகத் புஸ்பகுமார, அத்துல குமார ராகுபத்த உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நிவித்திகல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...