ஜனாதிபதி தேர்தலை இழுத்தடிக்க ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது | தினகரன்


ஜனாதிபதி தேர்தலை இழுத்தடிக்க ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது

ஜனாதிபதித் தேர்தலை எக்காரணத்தைக் கொண்டும் நடத்தாது இழுத்தடிக்க இடமளிக்க முடியாது என ஜே.வி.பி தெரிவித்தது.  

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2015 ஜனவரி 9 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கிறது. இதன் அடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.  

ஜே.பி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். எந்தவொரு நபரும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்க முடியாது. உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படுவதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

19 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு  அமைய சத்தியப்பிரமாணம் எடுத்து பதவியேற்ற தினத்திலிருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிக்கிறது. இதற்கமைய தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் அமையும். தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமானது.  

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தில் ஐந்து வருடங்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று தனது பதவிக்காலம் ஆரம்பிப்பது ஜனவரி 8 ஆம் திகதியா அல்லது மே மாதமா என வினவுவதில் எந்தவிதமான அடிப்படையும் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கோ அல்லது இழுத்தடிப்பதற்கோ இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்  


Add new comment

Or log in with...