Friday, March 29, 2024
Home » TIN இலக்க சேவை எனக் கூறி பண மோசடி செய்யும் கும்பல்

TIN இலக்க சேவை எனக் கூறி பண மோசடி செய்யும் கும்பல்

by sachintha
February 9, 2024 9:00 am 0 comment

பொதுமக்களுக்கு குருநாகல் DIG எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோருக்கான [Taxpayer Identification Number (TIN)] இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவையெனத் தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பாக குருநாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் (ஹெக்கர்ஸ்) ஊடுருவல் கும்பலொன்று இயங்கி வருவதாகவும் மோசடிக் கும்பலிடம் சிக்கி பல இலட்சம் ரூபா பணத்தை இழந்தவர்கள் தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த அலுவலகம் தெரிவித்தது.

அரச வங்கியின் பணியாளர்களென தொலைபேசியில் அழைக்கும் இக்கும்பல், Taxpayer Identification Number தொடர்பான வங்கிக் கணக்கை எவ்வாறு பராமரிப்பதென்பது தொடர்பாக தெரிவிப்பதுடன், பின்னர் வங்கிக் கணக்கை அமைக்க வேண்டிய வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற கடவுச்சொல்லை (OTP) கேட்பதாகவும் இதன்போது தாம் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு எதனையும் விசாரிக்காமல் அந்த இரகசிய இலக்கத்தை அவர்களிடம் வழங்கி விடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் இம்மோசடிக் கும்பல் தாம் தொடர்புகொண்ட நபரின் வங்கிக் கணக்குக்குள் நுழைந்து, இலட்சக்கணக்கில் பணத்தை எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், குருநாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகம் தெரிவித்தது.

இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றி வரும் இம்மோசடிக் கும்பல், நேற்று முன்தினம் குருநாகல் நகரிலுள்ள பிரதான கல்வி நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 02 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாகவும் கடந்த வாரம் வேறொருவரின் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொலைபேசியில் அழைத்து தனிப்பட்ட தகவல்களை கேட்கும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாமென்று மக்களை கேட்டுக்கொண்ட குருநாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகம், இது தொடர்பாக குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களினூடாகவும் மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT