Friday, April 19, 2024
Home » தனியார் பல்கலை மாணவர்களுக்கும் அரச வங்கிகளில் வட்டியில்லா கடன்

தனியார் பல்கலை மாணவர்களுக்கும் அரச வங்கிகளில் வட்டியில்லா கடன்

by sachintha
February 9, 2024 8:27 am 0 comment

தொடர்ச்சியாக வழங்க உரிய நடவடிக்கை -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

 

ஹொரய்ஸன் உட்பட இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் கே.ஐ.யு மற்றும் ஹொரய்ஸன் ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அந்தக் கடனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கான அமைச்சரவைப்பத்திரம் தயார் நிலையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான செயற்பாடுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில் மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு அந்த இரண்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குறித்த வட்டியில்லாத வங்கிக் கடன் வழங்கப்படாததன் காரணத்தால் அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த கல்வி அமைச்சர்,

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2017 ஆம் ஆண்டு இந்த கடன் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இம்முறை ஏழாவது மாணவர் குழு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்க பல்கலைக்கழகங்கள் அல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் சுமார் 5,000 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வட்டியில்லாக் கடன் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் எதிர்க்கட்சித் தலைவரால் இந்தக் கேள்வி சபையில் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு மறுநாளே ஜனாதிபதி செயலகத்தில் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்போது இரண்டு வங்கிகளினதும் முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள் ஆகியோரும் அழைக்கப்பட்டு அந்த விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.

இதற்கு முன்னர் கடன் பெற்றுக்கொண்ட சுமார் 200 பேர், அந்தக் கடனை மீள செலுத்த தவறிய காரணத்தாலேயே இந்தக் கடனை மீள பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT