Home » தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழருக்கு ரூ. 3.56 கோடியில் 58 வீடுகள் கையளிப்பு

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழருக்கு ரூ. 3.56 கோடியில் 58 வீடுகள் கையளிப்பு

by sachintha
February 9, 2024 7:32 am 0 comment

ரூ. 400 கோடி செலவில் 7,504 வீடுகளும் நிர்மாணம்

 

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க தொடர்ந்து முயற்சி எடுப்போம். முதல் கட்டமாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. எஸ்.செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 3.56 கோடி ரூபாவில் கட்டப்பட்ட 58 வீடுகள் கொண்ட வீடுகளின் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய குடியிருப்பை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார்.

பின்னர் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழகத்தில் இலங்கைத் தமிழரின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களில் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு 400 கோடி ரூபாவில் முதல்கட்டமாக 3,551 வீடுகளும், 02ஆவது கட்டமாக 3,953 வீடுகளும் புதிதாக கட்டப்படுகின்றன. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, 106 முகாம்களில் தங்கியுள்ள 20 ஆயிரம் குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது 184 கோடி ரூபாவில் உணவுப் பொருட்கள் கப்பல்கள் மூலம் இலங்கை தமிழர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டன என்றார்.

 

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT