Thursday, April 25, 2024
Home » பல்கலை விரிவுரையாளர்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்
வெளிநாடுகளில் உயர் கல்வி பெற்ற பின் சேவைக்கு சமுகமளிக்கவில்லை

பல்கலை விரிவுரையாளர்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்

by sachintha
February 9, 2024 6:59 am 0 comment

பெற்றுக்கொண்ட கடனில் 130 கோடி ரூபாவை மீள செலுத்தவில்லை

உயர் கல்விக்கு வெளிநாடு செல்வதற்காக அரச வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தாததாலேயே அரசுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாக அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ பாராளுமன்றில் தெரிவிப்பு

 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அரச வங்கிகள் மூலம் (1,300 மில்லியன்) 130 கோடி ரூபாவை கடனாக பெற்றுக்கொண்டுள்ளதுடன், அதனை மீள செலுத்த தவறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அந்த விரிவுரையாளர்கள் உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள போதும் அவர்கள் மீண்டும் தத்தமது பல்கலைக்கழகங்களுக்கு வருகை தர தவறியுள்ளனர்.

அதனால் இந்த பணத்தை அறவிடுவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்போ அல்லது வங்கிகளோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவை நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக அந்த வங்கிகள் மூலம் விவசாயத்துறை மற்றும் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் அனைத்து விவசாய நிறுவனங்களிலும் இலங்கை வங்கிக்கிளை இயங்கி வந்துள்ளது. அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக கடன் வழங்கும் நடைமுறையை அந்த வங்கிகள் முன்னெடுத்தன. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன அவ்வாறு வழங்கியுள்ள மூன்றாம் கட்ட கடனில் 602 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளவர்களால் மீள செலுத்தப்படாமல் உள்ளது. சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் வழங்குவதற்கான வாய்ப்பு இருந்த போதும் அரச வங்கிகள் இரண்டும் பின்பற்றிய கொள்கை காரணமாக 602 பில்லியன் ரூபா நாட்டுக்கு இல்லாமற் போயுள்ளது. இதனை நோக்கும் போது அரச வங்கிகளின் நிதிக் கொள்கைகள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT