Home » இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை முன்னேற்ற முடியாது

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை முன்னேற்ற முடியாது

by sachintha
February 9, 2024 6:37 am 0 comment

ஜனாதிபதி இதில் கவனம் செலுத்த வேண்டும்

 

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றும் ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடன உரையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று குறிப்பிடுவதை பழக்கமாகக் கொண்டுள்ள ஜனாதிபதி, தமது கொள்கைப் பிரகடன உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்த அவர், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடன உரையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு விட்டதாக குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் எவ்வித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடம் இரவல் வாங்குவது மாத்திரமே அரசாங்கத்தின் பிரதான வெற்றியாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

தேர்தல்களை நடத்தும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. இது ஜனநாயக நாடு. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அதற்கான நிதி விடுவிப்பு தடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபை தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனிநபர் பிரேரணையை முன்வைத்து பல யோசனைகளை நான் முன்னைத்துள்ளேன்.

அவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT