Home » உயர் நீதிமன்றால் கேள்விக்கு உட்படுத்த முடியாது
பாராளுமன்றில் நிறைவேறிய சட்டம்

உயர் நீதிமன்றால் கேள்விக்கு உட்படுத்த முடியாது

by sachintha
February 9, 2024 7:54 am 0 comment

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு கிடையாதென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்வதாக சபையில் தெரிவித்த அவர், அதற்காக முழு சட்டத்தையும் தீயிலிட முடியாதென்றும் பாராளுமன்றத்தின் ஊடாக திருத்தங்களை கொண்டுவந்து அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உயர்நீதிமன்றத்தின் திருத்த யோசனைகளுக்கு அப்பால் நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் அது தொடர்பில் கலந்துரையாட விசேட கட்சித் தலைவர் கூட்டம் ஒன்றை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர்,

“சட்டம் இயற்றல் தொடர்பில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் சட்டவரைபில் அரசியலமைப்பின் வகிபாகத்தை சட்ட மாஅதிபர் உறுதிப்படுத்தியதன் பின்னர் தான் சட்டவரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை 14 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் உரிமை நாட்டு மக்களுக்கு காணப்படுகிறது.

அந்த வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 45 க்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள் முறையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரசாங்கத்தின் சார்பில் சட்ட மாஅதிபர் பல திருத்தங்களை அதில் முன்வைத்தார். அதற்கமைய சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை வழங்கியது.

உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, குழு நிலை விவாதத்தின் போது திருத்தம் செய்யப்பட்டது.

தயாரிக்கப்படும் சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா? அல்லது முரணற்றதா என்பதை பரிசீலனை செய்யும் அதிகாரம் மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு காணப்படுகிறது. அரசியலமைப்புக்கு முரணான ஒரு சரத்து காணப்படுமாயின் அதனை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என அதன் போது நீதிமன்றம் அறிவிக்கும்.

இத்தகைய பின்னணியில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். திருத்தங்களை முன்வைத்தால் கலந்துரையாடி அதனை நிவர்த்தி செய்ய முடியும். எந்த சட்டத்தையும் குறைபாடுகள் இல்லாமல் இயற்ற முடியாது.

நாட்டின் அரசியலமைப்பிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. அதனால் தான் அது 21 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அந்த வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல. 2016 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக சட்டவரைபு தயாரிக்கப்பட்டு, சிங்கப்பூர் நாட்டிலுள்ள 11 சமூக வலைத்தளங்களின் முகவர்களுடன் அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

சுய ஒழுக்க கட்டுப்பாட்டுக் கோவையை சமூக வலைத்தளங்களில் அறிமுகப்படுத்துவதாக சமூக நிறுவனங்கள் குறிப்பிட்டன. ஆனால் வழங்கிய வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றாத காரணத்தால் தான் நிகழ்நிலை காப்புச் சட்டம் சுய ஒழுக்க கோவையை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT