Home » ரபாவுக்குள் நுழைய தயாராகும்படி இஸ்ரேலிய துருப்புகளுக்கு உத்தரவு
பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும்

ரபாவுக்குள் நுழைய தயாராகும்படி இஸ்ரேலிய துருப்புகளுக்கு உத்தரவு

by sachintha
February 9, 2024 8:24 am 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் நேற்று (08) ஆரம்பமான நிலையில், எகிப்து எல்லையை ஒட்டிய மக்கள் நிரம்பி வழியும் தெற்கு காசாவின் ரபாவுக்குள் நுழைய துருப்புகளை தயாராக இருக்கும்படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் அளித்த பதிலை நெதன்யாகு நிராகரித்ததை அடுத்தே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். போர் நிறுத்த முன்மொழிவை ஒட்டி இராஜதந்திர முயற்சிகள் தீவிரம் அடைந்திருப்பதோடு பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டினி பிளிங்கனும், “உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தஞ்சமடைந்திருக்கும் ரபாவை நோக்கி இஸ்ரேலிய படைகள் முன்னேறுவது தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. இந்த நகரை நோக்கி படைகள் முன்னேறுவது “ஏற்கனவே உள்ள மனிதாபிமான நெருங்கடியை அதிவேகமாக அதிகரிக்கும்” என்று ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் பேசிய நெதன்யாகு, ரபா நகரில் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும்படி துருப்புகளுக்கு உத்தரவிட்டதாகவும் ஹமாஸ் மீதான முழு வெற்றிக்கு சில மாதங்களே எஞ்சி இருப்பதாகவும் தெரிவித்தார்.

போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பில் பேசிய அவர், “நாம் இப்போது கேள்விப்பட்ட ஹமாஸின் வினோதமான கோரிக்கைகளுக்கு அடிபணிவது… இன்னொரு படுகொலைக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கும்” என்றார்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்தியத்திற்கு மற்றுமொரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் பிளிங்கன், டெல் அவிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹமாஸின் பதில் முன்மொழிவு குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையை தொடர வாய்ப்பை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

“ஹமாஸின் பதிலில் தெளிவாகவே வெற்றி அளிக்காத சில விடங்கள் இருந்தபோதும், அது உடன்பாடு ஒன்றை அடைவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக நாம் நம்புகிறோம். அதனை அடையும்வரை நாம் ஓய்வின்றி செயற்படுவோம்” என்று நெதன்யாகுவை சந்தித்த பின்னர் பிளிங்கன் குறிப்பிட்டார்.

தொடரும் பேச்சு

காசாவில் அமைதியை ஏற்படுத்துவது மற்றும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றுக்கான முயற்சியாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் தேவையான நெகிழ்வுப் போக்கை காண்பிக்கும்படி மத்தியஸ்தம் வகிக்கும் எகிப்து வலியுறுத்தி இருப்பதாக இது தொடர்பில் நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தம், போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை இலக்காகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பு இணங்கியதாக அந்த அமைப்பின் நெருங்கிய வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் உயர்மட்ட உறுப்பினர் கலீல் அல் ஹய்யா தலைமையிலான தூதுக் குழு ஒன்று கெய்ரோ சென்றிருப்பதாக ஹமாஸ் முத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் பதில் முன்மொழிவை நெதன்யாகு நிராகரித்தது தொடர்பில் பதிலளித்த ஹம்தான் கூறும்போது, “போர்நிறுத்த முன்மொழிவு குறித்த நெதன்யாகுவின் கருத்துகள் அவர் பிராந்தியத்தில் மோதலை தொடர விரும்புவதை காட்டுகிறது” என்றார்.

அனைத்து பலஸ்தீன போராட்டக் குழுக்களும் தொடர்ந்து போராடுவதற்கு ஹமாஸ் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 27,840 ஆக அதிகரித்துள்ளது. இதனை காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 130 பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சு கூறியது. கடந்த நான்கு மாதங்களை தாண்டி நீடிக்கும் இந்தப் போரில் 67,317 பேர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக ரபா நகரில் இரு வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

மத்திய காசாவில் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலஸ்தீன தொலைக்காட்சிக்காக பணியாற்றும் நபிஸ் அப்தல் ஜவாத் என்ற ஊடகவியலாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தவிர தெற்கில் கான் யூனிஸ் மற்றும் வடக்கில் காசா நகரிலும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தன.

ஒக்டோபர் 7 தாக்குதலின்போது சுமார் 250 இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 132 பேர் பணயக்கைதிகளாக சிக்கி இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. இவர்களில் 29 பேர் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த பணயக்கைதிகள் விவகாரம் இஸ்ரேலில் பெரும் நெருக்கடியை உருவாக்கி இருப்பதோடு நெதன்யாகு அரசு மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. அங்கு பணயக்கைதிகளை மீட்கக் கோரியும் நெதன்யாகு அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற தற்காலிக போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்ட பணயக்கைதி ஒருவரான அடினா மோஷே, பிரதமரை சுட்டிக்காட்டி செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “எல்லாம் உங்கள் கையில் உள்ளது” என்றார்.

“ஹமாஸை அழிக்கும் இந்தப் போக்கை நீங்கள் (நெதன்யாகு) தொடர்ந்தால், எம்மால் ஒரு பணயக்கைதியைக் கூட விடுவிக்க முடியாமல் போகும் என்று நான் பெரும் அச்சம் மற்றும் கவலை அடைகிறேன்” என்றார்.

ரபாவில் கவலை அதிகரிப்பு

காசாவில் மேலும் தெற்காக இஸ்ரேலிய படை முன்னேற தயாராகும் நிலையில், ஏற்கனவே எகிப்துடனான எல்லை வரை துரத்தப்பட்டு தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றுக்கும் பலஸ்தீனர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.

காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அளவானவர்கள் தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

“உயர்வாழ்வதற்கான அடிப்படை தேவைகள் போதுமாக இல்லாமலும், பட்டினி, நோய் மற்றும் மரணங்கள் துரத்தும் நிலையிலும் அவர்களின் வாழ்க்கை நிலைமை படு மோசமாக உள்ளது” என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்டின் கிரிப்பித் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் போர் மேலும் ரபாவுக்குள் நுழைவது, பாதுகாப்பை தேடி வரும் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து நாம் பெரும் கவலை அடைகிறோம்” என்று அவர் கூறினார்.

இந்த நகருக்கு படைகளை அனுப்புவதை நிறுத்தும்படி கூறத் தவறிய பிளிங்கன், புதிய முன்னேற்றம் பற்றி கவலையை வெளியிட்டார். “இஸ்ரேல் முன்னெடுக்கும் எந்த ஓர் இராணுவ நடவடிக்கையும் பொதுமக்களை முதன்மைப்படுத்தியும் முதன்மையானதாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் குறிப்பாக சுமார் 300,000 மக்கள் சிக்கியுள்ள வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா. மனிதாபிமான அலுவலகம் வெளியிட்ட அறிவித்தலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் காசா நகரை சென்றடையும் மனிதாபிமான உதவிகளின் அளவு பஞ்சம் ஒன்றை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் கடைசியாக வடக்கு காசாவுக்கு கடந்த ஜனவரி 23 ஆம் திகதியே உணவு விநியோகத்தை மேற்கொண்டதாகவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT