ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு | தினகரன்


ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசாங்க நிறுவனங்களில் 2015 - 2018 காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம், இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் விசாரணையை பூர்த்தி செய்வதற்காக இன்னும் ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இதற்கான பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இவ்வருடம் ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டது. இதன் முதல் பதவிக்காலம், ஜூலை மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்ததோடு, அதன் பதவிக்காலம் நேற்றையதினம் (30) வரை நீடிக்கப்பட்டிருந்தது.

அரசாங்க அலுவலகங்களில் ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக 1343 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் 137 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினாலும், 22 முறைப்பாடுகள் ஆணைக்குழுவினாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...