Thursday, April 25, 2024
Home » இலங்கை – ஆப்கான் அணிகளின் முதல் ஒருநாள் போட்டி இன்று பல்லேகலவில்

இலங்கை – ஆப்கான் அணிகளின் முதல் ஒருநாள் போட்டி இன்று பல்லேகலவில்

by sachintha
February 9, 2024 8:57 am 0 comment

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (09) பி. ப. 2.30 மணிக்கு பல்லேகலவில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய உற்சாகத்துடனேயே இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இலங்கைக் குழாம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க நீக்கப்பட்டதோடு அவருக்கு பதில் சாமிக்க கருணாரத்ன அழைக்கப்பட்டுள்ளார்.

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, துஷ்மன்த சமீர, அவிஷ்ன பெர்னாண்டோ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் முக்கியமானவர்களாக உள்ளன.

ஹஷ்மதுல்லா ஷஹிதி ஆப்கான் அணிக்கு தொடர்ந்து தலைவராக செயற்படவிருப்பதோடு மட்டுப்படத்தப்பட்ட ஓவர்களுக்காக முஹமது நபி, ரஹ்மானுல்லா குர்பால் மற்றும் பஸால் ஹக் பரூக்கி ஆப்கான் அணியில் இணைந்துள்ளனர். எனவே, டெஸ்ட் போட்டியை விடவும் ஆப்கான் ஒருநாள் அணி இலங்கைக்கு அதிக சவாலாக அமையவுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் இதுவரை 12 முறை ஒருநாள் போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் இலங்கை 7 தடவைகளும் ஆப்கான் அணி 4 தடவைகளும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி நடைபெறும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மந்தமான ஆடுகளமாக கருதப்படுகிறது. புதுப்பந்து துடுப்பாட்டத்திற்கு உதவும் வகையில் இருக்கும் என்றபோதும் மெதுவான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும்.

ஆப்கான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறாதபோதும் அந்த அணியில் சுழற்பந்து முகாம் பொதுவாக பலம்பொருந்தியதாக காணப்படுகிறது.

மறுபுறும் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனவுடன் சுழற்பந்து சகலதுறை வீரர் துனித் வெள்ளாலகேவும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருவதோடு, கடந்த உலகக் கிண்ணத்தில் அந்த அணி முன்கூட்டியே வெளியேறியது மாத்திரமன்றி 2025 சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குக் கூட தகுதி பெறவில்லை. இந்நிலையில் எதிர்வரும் வலுவான போட்டித் தொடர்களுக்காக அணியைக் கட்டமைப்பதற்கு இந்தத் தொடர் முக்கியமானதாக உள்ளது.

இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக பி.ப. 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT