Wednesday, April 24, 2024
Home » 50 வயதுக்குள் புற்றுநோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

50 வயதுக்குள் புற்றுநோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

by sachintha
February 9, 2024 4:24 pm 0 comment

உலக புற்று நோயாளர் தினமாக பெப்ரவரி 04ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தினத்தின் நிமித்தம் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய வைத்தியத்தை ஊக்குவித்தலும், புற்றுநோய் வராமல் தடுப்பதற்குரிய வாழ்வு முறையை ஊக்குவித்தலுமே இங்கு முக்கியமாக இடம்பெறுகிறது.

சர்வதேச புற்றுநோய் தடுப்பு ஒருங்கமைப்பின் ஏற்பாட்டில் புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட மிக அண்மைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2021 இல் இலங்கையில் புதிதாக 37,753 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி நாளொன்றுக்கு சுமார் 103 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அத்தோடு வருடமொன்றுக்கு 1000 இற்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் ஆண்களை அதிகம் பாதிக்கும் புற்று நோய்களாக வாய்க்குழி, நுரையீரல், பெருங்குடல், குதம், மற்றும் உணவுக் கால்வாய் புற்று நோய்கள் விளங்குகின்றன. மேலும் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்று நோய்களாக மார்பகம், தைரொய்டு, பெருங்குடல், கருப்பை மற்றும் கருப்பைவாய் ஆகியன விளங்குகின்றன. அந்த வகையில் மார்பகப் புற்று நோயானது கால்வாசிக்கும் அதிகமான பெண்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, 50 வயதிற்குட்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் 40, 30 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்களின் புற்றுநோய் தொடர்பான இறப்பு வீதம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மிக இளம் வயதில், அதாவது 50 வயதுக்குள் புற்றுநோயால் இறக்கின்றனர்.

அந்த வகையில் 2020 இல் இலங்கை மருத்துவமனைகளில் இறந்தவர்களில், புற்றுநோய் காரணமாக இறந்தவர்கள் 02ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். 2019 இல் 16 ஆயிரம் புற்றுநோய் இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆனால் உலகளாவிய ரீதியில் 06 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கின்றனர். மதுபானம், புகையிலை, அதிக உடல் நிறை, போதுமான அளவு மரக்கறி, பழங்கள் உட்கொள்ளாமை, உடற்பயிற்சி செய்யாமை ஆகிய காரணங்கள் 1/3 புற்றுநோய் இறப்பிற்கு வித்திடுகின்றன.

புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் பற்றிய எண்ணற்ற கட்டுக்கதைகளும் தவறான புரிந்துணர்வுகளும் காணப்படுகின்றன. அதனால் தகுதியற்ற ஆய்வுக்கு உட்படாத சிகிச்சை முறைகளை மக்கள் பாவிக்கின்றனர். இவ்வாறான காரணங்களால் குணப்படுத்தக்கூடிய சில புற்று நோயாளர்களும் கூட தீவிர நிலைக்கு செல்கின்றனர். அதனால் குணப்படுத்த முடியாத கட்டத்தில் சிகிச்சைக்கு வருபவர்களும் இருக்கின்றனர்.

இந்நிலைமை குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களைக் குணப்படுத்தக்கூடிய வாய்ப்பை கணிசமான அளவு குறைத்து விடக்கூடியதாக உள்ளது.

அதனால் இலங்கை புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம், பொது மக்களிடையே புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு, முன்கூட்டிய கண்டறிதல், முறையான சிகிச்சை முறைமை, புற்றுநோயைத் தவிர்க்கும் ஆரோக்கிய வாழ்வு முறைமை பற்றிய பொது அறிவினை பரவலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

விஞ்ஞான முன்னேற்றங்களால் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்தாலும், அதனுடன் தொடர்புடைய செலவினங்களும் அதிகரித்து வருகின்றன. இலங்கை அரச மருத்துவமனைகள் இந்நோயாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக சிறந்த தரமான சிகிச்சைகளை வழங்குகிறது. எவ்வாறாயினும் இச்சிகிச்சையின் தரத்தை பேணுவதற்கு இந்த வானளாவிய செலவினங்கள் சவாலாக உள்ளன.

இங்கு அரசதுறை நிதிப்பற்றாக்குறையை தனியார் கூட்டமைப்பின் மூலம் குறைக்க முடியும். தேசிய புற்றுநோய் வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாத்தறை பொது வைத்தியசாலை போன்றவற்றில் அண்மைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இலங்கை புற்றுநோய் மருத்துவ நிபுணர்களது சங்கமானது புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT